இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
68
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
முகில்
பயனில்லா ஒன்றால் பயன்? உப்புமலைமேல் உட்கார்ந்து இருக்கலாம். அங்கே இலைபோட்டும் உண்ணலாம். ஆனாலும் உப்பு எடுத்துப் போட்டால் தானே சுவை? இல்லையேல்..!
நூல்களை வாங்கி வாங்கி அழகுற அடுக்கி வைக்கலாம்; வனப்பு மிக்க நிலைப்பேழைகளில் வைத்திருக்கலாம்...கசடறக் கற்று, அதன்படி நின்றால்தானே!
இப்படியே உளது உலகநடை-உயர்ந்தோர் நடை பேணாத கற்றோர் வாழ்வும்!
உயர்ந்தோரை உணர்ந்து, அவர் நெறிகளை அறிந்து, அவர்கள் நடைப்பேற்றில் கண்ட நிறுத்தங்கள், திருப்பங்கள், தங்கல்கள் இவற்றைத் தெளிந்து அறிந்தவன் பின்பற்றிச் செல்ல வில்லை என்றால், கல்வியும் இல்லாமல் பெரியோர் தொடர்பும் இல்லாமல் வாழும் கல்லாத ஒருவன் பின்பற்றிச் செல்லக் கூடுமா? கல்லாதவன் நிலைமையும், கற்றவன் நடை முறையும் ஒன்றாக இருக்குமானால் இருவருக்கும் என்னதான் வேற்றுமை?