உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

கூறிய ஐந்து அழகுகளும்‌ வாய்க்கப் பெற்றவள்‌. அவள் மணம்‌ செய்வதற்கு உரிய அகவையடைந்திருந்தாள்‌. அவள்‌ ஒரு நாள்‌ மாலை வேளையில்‌, பொழுது போக்குக்‌காக, அந்நகரத்துப்‌ பூஞ்சோலைக்குத்‌ தன்‌ தோழியர்களுடன்‌ சென்றாள்‌. அந்தச்‌ சமயத்தில்‌, மணமகளைத்‌ தேடிச் சென்ற அந்தணர்கள்‌, தற்செயலாக அந்தப் பூஞ்சோலைக்கு வந்தார்கள்‌. வந்தவர்கள்,‌ விசாகையைப் பார்த்தார்கள்‌.

ஐந்து அழகும்‌ பொருந்திய விசாகையைக்‌ கண்ட போது, தாங்கள்‌ தேடி வந்த மணமகள்‌ கிடைத்து விட்டாள்‌ என்ற மகிழ்ச்சியடைந்தார்கள்‌. அவர்கள்‌ நகரத்தில்‌ சென்று, விசாகையின்‌ குலம்‌, சுற்றம்‌, செல்வம்‌ முதலிய எல்லா விவரங்களையும்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு, நேரே சிராவத்தி நகரம்‌ சென்று, மிகாரச்‌ செல்வந்தனிடம்‌, சகேத நகரத்து, தனஞ்சயன் என்ற செல்வரின்‌ மகள்‌ விசாகை, எல்லா அழகும்‌ வாய்க்கப்‌ பெற்றிருப்பதைத்‌ தெரிவித்தார்கள்‌.

தம்மை விடச்‌ சிறந்த செல்வரின்‌ வீட்டில்‌, தகுந்த மணமகள்‌ இருப்பதைக்‌ கேட்ட அவர்‌ பெரிதும்‌ மகிழ்ச்சியடைந்தார்‌. உடனே விலையுயர்ந்த பொருள்‌களைக்‌ கையுறையாகக்‌ கொடுத்துத்‌ தகுந்த பெரியவர்களைத்‌ தம்‌ மகன்‌ புண்ணியவர்த்தன குமாரனுக்குப்‌ பெண்‌ கேட்கும்படி அனுப்பினார்‌. அவர்கள்‌ சகேத நகரம்‌ சென்று, தனஞ்சயச்‌ செல்வரின்‌ மாளிகையடைந்து, மணம்‌ பேசினார்கள்‌. தனஞ்சயச்‌ செல்வர்‌ தம்‌ மகளைப்‌ புண்ணியவர்த்தன குமாரனுக்கு, மணஞ்செய்து கொடுக்க ஒப்புக் கொண்டார்‌.