பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பச்சையம்

199

உயிரினாகும். பாக்டீரியா தான் உருவான இருபது நிமிட நேரத்திற்குள் இரண்டாகப் பிளந்து இரு உயிரிகளாகும். இவ்வாறு இவை இரண்டிரண்டாகப் பிளந்து தனித்தனி உயிர்களாகப் பெருக்கமடையும். இவ்வாறு ஒரே நாளில் கோடிக்கணக்கில் பல்கிப் பெருகி நோயைப் பரப்புகின்றன. பாக்டீரியா நோய்க் கிருமிகளால் உருவாகும் நோய்களுள் காச நோய், நிமோனியா, டைபாய்டு எனும் நச்சுக்காய்ச்சல், வாந்திபேதியாகிய காலரா போன்றவை முக்கிய நோய்களாகும்.

மற்றொரு நோய்க்கிருமியாகிய புரோட்டோ சோவாவும் ஒரணுவாலானதேயாகும். இவை பாக்டீரியா நோய்க் கிருமிகளைவிட அளவில் சற்றுப் பெரியதாயினும் வெறுங்கண்ணால் காணமுடியாது. இவற்றையும் நுண்பெருக்காடியாகிய மைக்ராஸ்கோப் மூலமே பார்க்க இயலும். இக்கிருமிகள் மலேரியா போன்ற நோய்களை உண்டாக்குகின்றன.

மூன்றாவது வகையான வைரஸ் எனும் நச்சுக் கிருமிகள் மேற்கூறிய இருவகைக் கிருமிகளையும்விட மிகமிகச் சிறியதாகும். இவற்றை நுண் பெருக்காடி மூலம்கூட காணமுடியாது. எலெக்ட்ரான் மைக்கராஸ்கோப் எனும் மின்னணு நுண் பெருக்காடியின் துணைகொண்டு உருவாக்கப்படும் உருப்பெருக்கு ஒளிப்படம் மூலமே அறிய முடியும். வைரஸ் நச்சுக் கிருமிகள் உயிர்த்தன்மை பற்றியும் இயங்கும் தன்மையற்றியும் இன்னும் தெளிவாகக் கண்டறியப்படவில்லை. அவற்றை அறியும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கிருமிகள் இளம்பிள்ளைவாதம், மஞ்சள் காய்ச்சல், அம்மை நோய், சளிக்காய்ச்சல் போன்ற நோய்கள் தோன்ற அடிப்படைக் காரணமாய் அமைகின்றன.

காளான் கிருமிகள் (Fungus) தோல் நோய்களையும் நுரையீரல் நோயையும் உண்டாக்க வல்லவை.

நோய்க்கிருமிகளான இவை நம் உயிரினுள் புகுந்து தாக்க முனையும்போது, அவற்றை எதிர்த்து நிற்பவை நம் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களாகும். இயற்கை எதிர்ப்பு சக்தியான இவ்வெள்ளை அணுக்கள் வலுக்குன்றும்போதே நோய்க் கிருமிகள் உடலில் ஆதிக்கம் பெற்று நோய்களைத் தோற்றுவிக்கின்றன. பின், செயற்கை நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் ஏற்படுத்தி நோயைப் போக்க உரிய மருந்துகளை உட்கொள்கிறோம். இவை நோய்க்கிருமிகளைக் கொன்று நோயைப் போக்கி நம்மை காக்கின்றன.


நோயியல் : உடல் நோய்களால் பாதிக்கப்படும்போது நோய்க்கான காரணங்களையும் நோயைப் போக்கும் வழிமுறைகளையும் நோயேதும் வராமல் காப்பதற்கான தொடர் முயற்சிகளையும் பற்றிய மருத்துவ ஆய்வே 'நோயியில்' (Pathology) ஆகும்.

நோயியலின் முதற்படி உடலில் ஏற்பட்டுள்ள நோய் என்ன என்பதையும் அதன் தன்மைகளையும் நுணுகி அறிந்துணர்வதாகும். இதனை அறிய நோய் அறிகுறிகள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அனைத்து நோய்க் குறிகளையும் நன்கு அறிந்துள்ள மருத்துவரால் மட்டுமே எந்தவொரு நோயையும் இனங்கண்டு தெளிய முடியும்.

நோய் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமாயின் உடல் அமைப்பையும் அஃது இயங்கும் முறைகளையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் நோய்கள் நம் உடம்பில் எத்தகைய விளைவுகளை உருவாக்க முடியும் என்பதையும் அதன் இயல்புகளையும் நுணுக்கமாக அறிந்திருக்க வேண்டும். இம் மூன்றையும் உணர்த்துவதே 'நோயியல்’ துறை.

நோயியல் என்பது மனிதன் நோய்வாய்ப்பட்டு அதனின்றும் விடுபடத் தொடங்கிய காலம் முதலே இருந்துவரும் துறையாகும்.

நோயியலை ஒரு முழுத் துறையாக வகுத்தமைத்த பெருமை ஹிப்பாக்-கிரட்டீஸ் எனும் கிரேக்க மருத்துவரையும் இந்தியாவில்வாழ்ந்த சுருதர் எனும் மருத்துவரையுமே சாரும். அதன் பின் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி காரணமாக நோயியல் துறையும் விரைந்து வளரலாயிற்று. இயற்பியல் வளர்ச்சியும் வேதியியல் வளர்ச்சியும் நோயியலின் வளர்ச்சியை மிகவும் விரைவுபடுத்தி வியக்கத்தக்க முறையில் வளரச் செய்துள்ளன.


பச்சையம் : 'குளோரஃபில்’ என்று கூறப்படும் பச்சையம், தாவரங்கள் பச்சையாக இருப்பதற்கு மட்டுமின்றி பசுமையாக இருப்பதற்கும் காரணமாக உள்ளது. காளான் போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களைத் தவிர்த்துப் பிற எல்லா தாவரங்களிலும் பச்சையம் உண்டு.