பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அலுமினியம்

31


அலங்கு : இதை 'எறும்புதின்னி’ என்று அழைப்பார்கள். அலங்கு எறும்பு, கரையான், அவைகளின் முட்டை ஆகியவற்றை மட்டுமே புசித்து வாழ்கின்றது. இவை புதரான இடங்களில் உள்ள சிறு வளைகளிலும் பொந்துகளிலும் வாழ்கின்றன. இவை பகலில் பதுங்கியிருந்து இரவில் வெளிப்பட்டு இரை தேடி வாழ்கின்றன.

அலங்கு பிராணிகளின் உடல் நீளம் 75 செ.மீ. அளவுக்குள்ளாகவே இருக்கும். இதன் வால் பட்டையாக நீண்டிருக்கும். அதிகப்பட்சமாக இதன் நீளம் மட்டுமே 45 செ.மீ. இருக்கும். இதன் உடலின்மேல்பகுதி முழுமையும் கெட்டியான செதில்கள் ஒன்றன்மேல்ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும். பழுப்பு நிறமுள்ள இச்செதில்களே இதற்குத் தகுந்த பாதுகாப்பை அளிக்கின்றன. இதன் உடலில் வளரும் ஒரு வகை கெட்டி மயிரே ஒன்றிணைந்து கெட்டிச் செதில்களாகின்றன.

அலங்கு

இதன் கால் குட்டையானவை, ஆனால் வலிமை மிக்கவை. கால் விரல்நகங்கள் கூர்மையாகவும் கெட்டியாகவும் உள்ளன. இவ்விரல்களின் துணைகொண்டே எறும்புப் புற்றுகளையும் கரையான் மேடுகளையும் தோண்டி இரை தேடுகின்றன. இது அவ்வப்போது பாதுகாப்பின் பொருட்டு பந்துபோல் சுருண்டு கொள்ளும்

இது நிலத்தில் வாழும் பிராணியே யாயினும் அவ்வப்போது மரத்திலும் ஏறுவதுண்டு.இதன் தாடைகளில் பற்கள் இல்லை. ஆனால் நீளமான நாக்கு உண்டு. வாயில் பசைபோன்ற ஒருவித நீர் ஊறும். இப்பசை நீரின் உதவி கொண்டே எறும்பு கரையான் போன்றவற்றை நாக்கோடு ஒட்டச்செய்து உட்கொள்கின்றன. தன் மோப்ப சக்தியால் எறும்பு கரையான் புற்றுகளை இது எளிதாகக் கண்டறிகின்றது. குட்டிபோடும் இப் பிராணி பன்னிரண்டு ஆண்டுகள்வரை உயிர் வாழ்கின்றது. அழிந்து வரும் பிராணிகளில் அலங்கும் ஒன்றாகும்.

அலுமினியம் : இப்படியொரு உலோகம் இருப்பதே பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் தெரியவந்தது. இவ்வுலோகம் கண்டறியப்பட்டபோது இதன் பளபளப்பும் கனமற்ற லேசான தன்மையும் துருப்பிடிக்காத இயல்பும் இதனை ஒரு அரிய பொருளாகக் கருதச் செய்தது. 1827இல் முதன்முதலாக ஆலர் ( Wohler) என்பார் அலுமினியம் குளோரைடு சேர்மத்துடன் பொட்டாசியத்தை வினைபுரிய வைத்து அலுமினியத்தைப் பிரித்தெடுத்தார். பூமியின் புறப்பரப்பில் பொதுவாக 7.28% அலுமினியம் சேர்மநிலையில் உள்ளது. குறிப்பிட்ட களிமண் மற்றும் பாறைகளிலும் அலுமினியம் உள்ளது.

தொடக்கக் காலத்தில் மன்னர்களும் பெருந்தனச் செல்வர்களும் இவ்வுலோகத்தை தங்கத்தைவிட மதிப்புடைய உலோகமாக மதித்தனர். மற்றவர்கட்குத் தரும் உயர்ந்த பரிசுப் பொருட்களிலே மிகச் சிறந்த மதிப்புடைய பரிசுப் பொருட்களாக அலுமினியப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். அக்காலத்தில் இதனால் செய்யப்பட்ட அணிகலன்கள் மதிப்புமிக்கதாகவும் விலை உயர்ந்ததாகவும் கருதப்பட்டன. ஆரம்பக் காலத்தில் தாதுவிலிருந்து அலுமினியத்தைத் தனியே பிரித்தெடுப்பது மிகவும் செலவு பிடிப்பதாக இருந்ததும் மிகக் குறைந்த அளவே அலுமினியம் பிரித்தெடுக்க முடிந்தது என்பதும் இவ்வுயர் மதிப்புக்கு மற்றொரு காரணமாகும்.

அறிவியலில் துரித வளர்ச்சியின் விளைவால் அலுமினியத்தைத் தாதுவிலிருந்து எளிதாகப் பிரித்தெடுக்கும் வழிமுறைகள் நாளடைவில் எளிதாயின. இதனால் பெரும் அளவில் அலுமினிய உலோகம் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் இதன் பயன்பாடும் அதிகரித்தது. விலை மதிப்பும் குறைந்தது.

தொடக்கக் காலத்தில் அணிகலன்களும் வேலைப்பாடு மிக்க பரிசுப் பொருட்களும் தயாரிக்கப் பயன்பட்ட அலுமினிய உலோகம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமையல் பாத்திரங்கள், தட்டுமுட்டுச்சாமான்கள் செய்ய