பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

மட்டுமல்லாது நாட்டை ஆண்டு வந்த மன்னர்களும் அரசு அதிகாரிகளும்கூட மதிப்பும் மரியாதையும் காட்டி வந்தனர். முஸ்லிம்களுக்கு மார்க்க அடிப்படையில் உதவுவதில் பேரார்வம் காட்டினர். கூன்பாண்டியன் போன்ற ஹிந்து மன்னர்கள் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கான பள்ளிவாசல்களைக் கட்டிக் கொள்வதற்கான நிலங்களை வழங்குவதிலே மகிழச்சி கொண்டார்கள். ஏக இறைவனை இடையாள் இல்லாது நேரடியாக வணங்கலாம். ஓரிறைக் கொள்கையை ஏற்ற யாரும், வர்ணபேதம், ஜாதி வேற்றுமை இல்லாது யாரும் இறை வேதத்தை அவரவர் தாய் மொழியிலேயே நேரடியாகக் கற்றுத் தெளியலாம். இவ்வாறு மக்களிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அழுத்தமாக உருவாக்கும் இஸ்லாமிய நெறியின்பால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இதன் விளைவாக மக்கள் வேகமாக இஸ்லாத்தின்பால் இணைந்து வந்தனர். இதனையறிந்த ஶ்ரீராமானுஜர் இஸ்லாம் போன்று வர்ணபேதம், ஜாதி பேதம் பாராட்டாது மனிதர்களுக்காக இறைவன் அளித்த ஹிந்து வேதங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று போதிக்க முனைந்தார். அது வரையிலும் வேத மந்திரங்களை யாரெல்லாம் கற்றுக் கொள்ளக் கூடாது. யாரெல்லாம் கேட்கக் கூடாது, யாரெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது என ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தார்களோ அவர்களிடம் இறை வேதத்தைக் கொண்டு சென்று அவற்றை அறியச் செய்து, அதன்மூலம் தெய்வத்திடம் மக்களை அழைத்துச் செல்லும் போக்கையும் போதனைகளையும் மேற்கொண்டு இறைவன்- இறை வேதம்-மக்களுக்கிடையே இருந்த பெரும் இடைவெளி நீங்க இஸ்லாமியச் செல்வாக்கும் பெருந்துணையாயமைந்ததை அன்றையச் சூழலின் அடிப்படையில் டாக்டர் தாரா சந்த் போன்றவர்கள் ஆய்ந்து கூறித் தெளிவேற்படுத்தியுள்ளார்கள்.