பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

இல்லை. எங்களுக்கும், ஏன் உலகம் முழுமைக்கும் சொந்தமானவர்”. எனவே, இனி 'நம் பெருமானார்' என்றே பொதுவாகக் குறிப்பிட வேண்டும் என்று கூறியதோடு பெருமானாரின் பொதுமை உள்ளத்தைப் பெரிதும் போற்றிப் பேசினார். “பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கலாமா என விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பே பெண்களுக்கு பெருமானார் சொத்துரிமை வழங்க வழிகண்டார் என்றால் இஸ்லாமும் பெருமானார் பெருவாழ்வும் வருங்கால சமுதாய வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளி விளக்காயமைந்துள்ளதால் இதைப் புகழாமல் இருக்க முடியாது” என்றெல்லாம் பலபடப் புகழ்ந்து பேசினார். இவ்வாறு பெருமானார் பெருவாழ்வையும் இஸ்லாமிய நெறி முறைகளையும் நினைவுகூற அனைத்துப் பகுதி மக்களுக்கும் உரிமையும் கடமையும் உண்டு. அந்த உரிமையை கடமையை நிறைவேற்றுகின்ற முறையில் அனைத்துச் சமய மக்களும் ஒருங்கிணைந்த நிலையில் துபாய் மண்ணில் மீலாது விழாவைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அதில் நானும் பங்கேற்பதில் பெருமையும் பெருமகிழ்வும் பெருமிதமும் அடைகிறேன்.

யார் என்பதல்ல-என்ன என்பதே முக்கியம்

இந்த மீலாது விழாவைத் தமிழ் பண்பாட்டுக் கழகம் கொண்டாடுவதில் மற்றுமொரு சிறப்பம்சம் உண்டு. தமிழ்ப் பண்பாட்டிற்கும் பல்வேறு சிறப்புக் கூறுகள் உண்டு. அவற்றுள் தலையாயதாகப் போற்றப்படுவது “யார் என்பதைவிட என்ன என்பதில் கருத்தூன்றுவது” தான் அச்சிறப்பு. அதை நடைமுறைப்படுத்தும் முறையிலும் இம் மீலாது விழா இங்கே நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் நாட்டைச் சேர்ந்த பல்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களாயினும் தமிழ் பேசும் தமிழர்கள் என்ற முறையில் தமிழையும் தமிழ்ப் பண்பாட்டுமுறைகளையும்