பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

ஈரோடு மாவட்ட வரலாறு


வாய்ந்த எட்டாவாது தீர்த்தங்கரர் சந்திரப்பிரபர் கோயில் உள்ளது. விசயமங்கலத்தின் பழைய பெயர் வாகை.

சமணர்கள் இங்கு பெற்ற வெற்றியால் 'விசயமங்கலம்' என்று பெயர் ஏற்பட்டதென கோவை கிழார் கூறுகிறார். சமணக்கோயில் உள்ள பகுதி மேட்டுப்புத்தூர், பஸ்திபுரம், பஸ்திபாளையம், கோயில் பாளையம் என அழைக்கப் பெறுகிறது.

கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், வாத்திய மண்டபம், நிருத்தமண்டபம் என்ற ஐந்து பகுதிகளையுடையது.

கருவறையில் மிகப்பெரிய சந்திரப்பிரப தீர்த்தங்கரர் உருவம் கதையால் செய்யப்பட்டிருந்தது. அது சிதைந்து அழிந்தபின் அபிடேகத்திற்காக வைத்திருந்த 30 செ.மீ உயரம் உள்ள சிறு சிலையை கருவறையில் வைத்துள்ளனர். அர்த்தமண்டபத்தில் வர்த்தமான மகாவீரர் உருவச்சிலையை வைத்து வழிபடுகின்றனர். மகாமண்டபத்தில் அரசண்ணா மலையிலிருந்து கொண்டு வந்த நேமிநாதர் இயக்கி கூஷ்மாண்டினி உருவங்கள் உள்ளன. வாத்தியமண்டபத்தில் சந்திரப்பிரப தீர்த்தங்கரரின் இயக்கியான 'சுவாலாமாலினி' உருவச் சிலை சிறு அறையில் உள்ளது. வாத்திய மண்டபத்தில் ஆதிநாதர், கொங்குவேளிர், தமிழ்ப் புலவர்கள், பவணந்தி முனிவர், சீயகங்கன், கொங்குவேளிரின் அடிமைமாது ஆகியோர் கற்சிலைகள் உள்ளன.

நிருத்தமண்டபத்தில் ஆதிநாதரின் தோற்றம் முதல் அவர் பரிநிர்வாணம் அடையும் வரை 'ஸ்ரீபுராணம்' சிற்பத் தொகுதிகள் உள்ளன. பத்தாம் நூற்றாண்டு கங்கத் தளபதி சாமுண்டராயன் தங்கை 'புள்ளப்பை' சல்லேகளை விரதமிருந்து உயிர் நீத்த சிற்பம் ஒரு தூணில் கல்வெட்டுடன் உள்ளது. கொங்கு வேளிர் பெருங்கதையை இயற்றியதைக் குறிக்கும் நாகரிக் கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டு விட்டது. கருவறையில் 'சமவசரணம்' ஓவியம் உள்ளது.

வெள்ளோடு

ஈரோடு - சென்னிமலைச் சாலையில் ஈரோட்டிலிருந்து 15ஆம் கிலோ மீட்டரில் வெள்ளோடு உள்ளது. சர்வலிங்கேசுவரர் கோயிலின்