பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

2. மாவட்டம் உருவானது


ஈரோடு மாவட்டப் பகுதிகளின் உரிமைக்காகப் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் ஐதர்அலி - திப்புசுல்தான் கிழக்கிந்தியக் கும்பினி ஆகியோரிடையே பலமுறை கடும் போர்கள் நடைபெற்றன. இருதரப்பிலும் வெற்றி தோல்விகள் மாறிமாறி ஏற்பட்டன. அதனால் அலைக்கழிக்கப்பட்டது ஈரோடும். ஈரோட்டு மாவட்டப் பகுதியும் தான்.

4.6.1799ல் கன்னடத்துப் போர் வாள் விடுதலைப் போரின் முன்னோடி மாவீரன் திப்புசுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈரோடு மாவட்டப் பகுதி முழுவதும் கும்பினியார் வசம் ஆனது. உடனே இப்பகுதி நொய்யலை மையமாக வைத்து இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. "நொய்யல் தெற்கு மாவட்டம்" "நொய்யல் வடக்கு மாவட்டம்” என்று பெயரிடப்பட்டன. முறையே தாராபுரமும், பவானியும் தலைநகர்களாயின. தாராபுரத்திற்கு ஹர்டிஸ் என்பவரும், பவானிக்கு மேக்ளியாட் என்பவரும் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டனர். நொய்யலுக்கு வடகரையில் இருந்த காரணத்தால் கோயமுத்தூர் கூட பவானி தலைநகருடன் சேர்க்கப்பட்டது. பவானியில் பெரிய கட்டிடம் ஒன்று மாவட்ட நிர்வாகத்தின் பொருட்டுக் கட்டப்பட்டது. இன்றும் அம்மாளிகை உள்ளது.

நிலங்கள் சங்கிலி கொண்டு அளக்கப்பட்டு வரிக்கு உட்படுத்தப்பட்ட நிலங்கள் தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டன. சேலம் மாவட்ட ஆட்சியர் ஜெனரல் ரீடு கொண்டு வந்த திட்டப்படி மாவட்ட நிர்வாகம் நடைபெற்றது. இரண்டாவது மாவட்ட ஆட்சியராகப் பவானிக்கு வில்லியம் கேரோ என்பவர் நியமிக்கப்பட்டார்.

1804ல் மாவட்டம் திருத்தி அமைக்கப்பட்டுக் கோயமுத்தூரைத் தலைநகராகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்பட்டது. தாலுக்காக்களும் உருவாக்கப்பட்டன. கோயமுத்தூர் மாவட்டத்தில் கோயமுத்தூர், சத்தியமங்கலம், டணாயக்கன்கோட்டை, கொள்ளேகால், பொள்ளாச்சி,