பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

191


காங்கயம் சேசாசலக் கவிராயர் (19,20ஆம் நூற்றாண்டு)

காங்கயத்தில் வாழ்ந்த சேசாசலக் கவிராயர் 'அட்டாவதானி' என்று புகழ் பெற்றவர். சிவகிரி மயில் விடு தூது பாடியுள்ளார். பல தனிப்பாடல்களும் பாடியுள்ளார்.

பழைய கோட்டைப் புலவர்கள்

பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் மரபினர் பற்றி இரட்டைப்புலவர்கள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், கருங்குமரப் புலவர், ஜம்புலிங்க ஓதுவார், சிவகிரி பண்டிதர் முதலிய 45க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடல்கள் பாடியுள்ளனர். நான்மணி மாலை, காதல், பதிகம். நவகம், சிந்து, சதகம் போன்ற பல சிற்றிலக்கியங்கள் உள்ளன. அம்மரபில் வந்த கொற்றவேல் சர்க்கரையாகும், வள்ளியாத்தாள் என்ற பெண்பாலரும் கவி இயற்றும் ஆற்றல் உள்ளவர்கள். சிவமலை, நத்தக்காரையூர் செயங்கொண்டீசர் மீது பல சிறு பிரபந்தங்கள் பாடியுள்ளனர்.

வெள்ளோடு சாமிநாதப் புலவர் (10ஆம் நூற்றாண்டு)

பெருந்துறை வட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த புலவன் பாளையத்தில் வாழ்ந்த குந்தாணி சாமிநாதப்புலவர் சென்னிமலையாண்டவர் பிள்ளைத்தமிழ், கொன்றைவேந்தன் வெண்பா, நல்லணவேள் காதல், பெரியண்ணன் குறவஞ்சி முதலிய பல இலக்கியங்கள் பாடியுள்ளார். அவர் வழி வந்த இரத்தினாசலப் புலவர், குமாரசாமிப் புலவர் போன்ற பலர் வெள்ளோட்டில் வாழ்ந்துள்ளனர்.

தி. அ. முத்துசாமிக்கோனார் (1858-1944)

திருச்செங்கோடு தி.அ. முத்துசாமிக்கோனார் பதிப்பித்த இலக்கியங்களில் நல்லதம்பிச்சர்க்கரை மன்றாடியார் காதல், சிவமலைப் புராணம், சிவமலைக் குறவஞ்சி. பூந்துறைப் புராணம். கொங்கு மண்டல சதகம், பரம்பண்ண கவுண்டன் குறவஞ்சி ஆகியவை ஈரோடு மாவட்ட இலக்கியங்களாகும்.