பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

35. கலைத் தொடர்பு


இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில், இசையையும், நாடகத்தையும் பெரும்பாலும் 'கலை' எனக் கூறுவது வழக்கம் நாடகத்தைக் 'கூத்து' என்றும் கூறுவர். இசையும் கூத்தும் ஈரோடு மாவட்டத்தில் தொன்று தொட்டுச் சிறப்புற்று விளங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம், அறச்சலூர் ஆண்டிபாறையில் சமண முனிவர்கள் வாழ்ந்த இயற்கைக் குகை உள்ளது. கூத்துக்கு உரிய இசை அடைவு எழுத்துக்களை மணிய வண்ணக்கன் தேவன் சாத்தான் என்பான் 1800 ஆண்டுகட்கு முன் பொறித்துள்ளான். இந்தியாவிலேயே தொன்மையான இசை பற்றிய கல்வெட்டு இதுவேயாகும்.

அடியார்க்கு நல்லாரால் குறிக்கப்பட்டு அழிந்து போனதாகக் கருதப்பட்ட அறிவனார் செய்த 'பஞ்சமரபு' என்னும் சங்க இசை நூல் காங்கயம் வட்டம் பாப்பினியில் உள்ள பச்சோட்டு ஆவுடையார் ஈசுவரன் கோயிலில் நடராசர் சன்னதியில் கிடைத்து புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அதைப் பதிப்பித்துள்ளார். அதன் ஓலைச் சுவடியில் "காங்கய நாட்டு மடவளாகம் வெள்ளச்சி மகன் தம்பான் புலவன் பிலவங்க வருஷம் ஐப்பசி மாதம் 5ஆம் தேதி எழுதி முடிந்தது" என்று தொடர் காணப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கிடைத்த 'பரத சங்கிருகம்' என்னும் நாட்டிய நூலையும் தெய்வ சிகாமணிக் கவுண்டர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மூலம் பதிப்பித்துள்ளார். சங்ககிரியில் பிறந்து ஈரோட்டில் வாழ்ந்த ச.து. சுப்பிரமணிய யோகி "கூத்த நூல்" பதிப்பித்தார்.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் பெருந்துறை வட்டம் விசயமங்கலத்தில் வாழ்ந்த கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதையின் காப்பிய நாயகன் மிகச் சிறந்த இசை நிபுணன். யாழ்வாசித்து மத யானையைக் கூட அடக்குகிறான். அதேபோல கி.பி. 10ஆம் நூற்றாண்டில் பெருவஞ்சி என்ற தாராபுரத்தில் வாழ்ந்த திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணி நாயகன் சீவகனும் இசை நிபுணன். அவர்கள் மூலம்