பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

ஈரோடு மாவட்ட வரலாறு


நியமித்துள்ளனர். அவர்கள் எல்லோரும் நாட்டியத்தில் தேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் 'நாட்டியம்' 'சதுர்' ஆடியுள்ளனர். டணாயக்கன் கோட்டைக் கல்வெட்டு அக்கோயில் "தேவரடியார் முன் அரங்கு ஏறி ஆடக்கடவர்" என்று கூறுகிறது.

கொங்கு வேளாளர் திருமணங்களில் "பட்டன், புலவன், பண்பாடி, தக்கை கொட்டி, கூத்தாடி' என்ற ஐவாணர்கள் பாடியும் வாத்தியம் வாசித்தும் நடித்தும் ஆடியும் வரிசை பெறுவது வழக்கம். இவர்களில் பண்பாடி, தக்கை கொட்டி, கூத்தாடி மூவரும் கலைஞர்கள்.

"தக்கைக் கொட்டிக்காரன் நவதானிய கோத்திரத்தில் செல்லன், வேலன், முத்தன், பொன்னன், வெள்ளை, குருவன், பச்சான், அவிநாசி, குளந்தான் கொத்து 9; பண்பாடியில் சின்னான், கின்னார வேலன், தயிலான், வீரன், அளகன், பழனி, செஞ்சி கொத்து 7: கூத்தாடியில் பெரியான், மருதன், பெருமாள், செல்லன், பழனி, வெள்ளை, முத்தன், காறி, தேவன், வேலன் கொத்து 10;

தக்கைகொட்டிக்கு விருது உடுக்கை, பண்பாடிக்கு விருது வீணை, தாசிகூத்தாடிக்கு விருது கைக்கோள மத்தளம் இப்படி இந்த மூன்று படிக்காரரும் கலியாணத்துக்கு விருது வாத்தியத்துடனே நாட்டார் கலலுக்குக் காப்புக்கட்டிக் குப்பாரி கொட்டும் சீருக்கும் பெண் ணெடுக்கும் சீருக்கும் அவரவர் விருது வாத்தியத்துடனே நடந்து வரவும்" என்று கூறுகிறது.

‘மீனாட்சி செப்பேடு' கூத்தாடிகளுக்கு வரியில்லை என்று கூறுகிறது. நாடார்களுடைய கருமாபுரம் செப்பேட்டில் “எங்கள் சாதிப் பிள்ளை கூத்தாடிகளுக்கு ஈழத்துப் பேரும் இலங்கைப்பேரும் கொடுத்து விருது எடுத்து ஆடி வருவதற்காக குடிக்கு ஒரு பணமும் சாப்பாடும் கொடுப்போம்" என்று கூறப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டக் கல்வெட்டு கூத்தாடும் தேவர் என்று நடராசப் பெருமானைக் கூறுகிறது.

ஈரோட்டில் 'அய்யனாரப்பன் பள்ளு': திங்களூரில் 'அருள் மலை" நொண்டி நாடகம் ஆகியவை பாடி ஆடி நடிக்கப்பட்டுள்ளது.