பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

ஈரோடு மாவட்ட வரலாறு


பாளைம் செப்பேடு தெய்வானையம்மாளைப் 'பெரிய கவுண்டச்சி தெய்வானையம்மாள்' என்று புகழ்கிறது.

காடையூர் வெள்ளையம்மாள்

காடையூர் கொங்கு வேளாளரில் சேட குலத்தில் பிறந்த வெள்ளைப்பெண் வெள்ளையம்மாள் கருமாபுரம் பொருளந்தை குலக் காங்கேயனை மணந்தாள். தந்தை கொடுக்க ஒப்புக் கொண்ட காடையூர்க் கால்காணியைக் கொடுக்க மறுத்த வெள்ளையம்மானின் சகோதரர்கள் அவள் கணவனையும் கொன்று விடுகின்றனர்.

நடத்தை கெட்டவள் என்று கருமாபுரத்திற்குத் துரத்தப்பட்ட நிலையில் இஸ்லாமிய சர்தார் துணையோடு மிகக் கடுமையான நிபந்தனைகளை வென்று காடையூரில் முழுக்காணியும் பெற்று காடையூர்ப் பட்டக்காரர் மரபைத் தோற்றுவித்தாள். வெள்ளையம்மாள் கோயில் காடையூர் காடையீசுவரர் கோயிலில் உள்ளது. கண்ணாடிப் பெருமாள் என்பவர் இவர் வரலாற்றை "வெள்ளையம்மாள் காவியம்" என்ற பெயரில் பாடியுள்ளார்.

பழைய கோட்டை மகளிர்

கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களுக்கு பட்டம் சூட்டும் போது கணவன்-மனைவி இருவருக்குமே ஒன்றாகவே விழாச் சடங்குகள் நடைபெறுகின்றன.

'பங்கேரு சுத்தில்உதி லட்சுமி நிகர்த்தநல்
    பத்தினி சமேதராகப்
பாங்குள்ள ஆறுகால் பீடத்தில் உட்கார்ந்து
    பட்டத்து வாளாயுதம்
பதிசதிகள் இருவருக்குமே"

என்று முடிசூட்டுப் பாடல் கூறுகிறது. இதற்கேற்ப பழைய கோட்டை அரண்மனை மகளிரும் வீரம், கொடை, சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சிறப்பித்துள்ளனர். பழந்தமிழர்

"காணார் கேளார் கால்மூடம் பட்டார்
பேணுநர் அற்றார் பிணிவாய்ப் பட்டார்"