பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

39. சட்டமும் ஒழுங்கும்


நாடாண்ட அரசர்கள் மக்கள் தலைவராக, காவலராக இருந்த காரணத்தால் இறை, காவலன் என்று அழைக்கப்பட்டனர். அரசனின் நல்லாட்சிக்கு அமைச்சரும் ஐம்பெருங்குழுவும் எண் பேராயமும் இருந்தனர். அரசனே நேரடியாகவும் நீதி வழங்கினான். மாறு வேடத்தில் சென்று குறைகண்டு களைந்த அரசர்களும் உண்டு.

இருவரிடையே வழக்கு ஏற்பட்டால் ஆட்சி (Right), ஆவணம் (Record) அயலார்காட்சி (Witness) மூன்றையும் கவனித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பெரியபுராணம் கூறுகிறது. முன்பு ஐந்து பேர் சேர்ந்து ஆய்ந்து தீர்ப்புகள் அளித்தனர். "பஞ்சாயத்து" என்ற சொல் அதிலிருந்து எழுந்ததே. இடைக்காலத்தில் "மத்யஸ்தர்" 'நடுவிருக்கை' என்ற அலுவலர்கள் வழக்குகளை விசாரித்தனர். ஊர்ப் பொதுமக்கள் ஒன்று கூடித் தீர்ப்பளித்த 'மக்கள் நீதிமன்றம்' பற்றிய ஆவணங்களும் உண்டு.

கோயிலுக்குரிய மேல்வாரம் கொடுக்காவிட்டால் “மண்கலம் தகர்த்து வெண்கலம்" பறிக்கும் வழக்கம் (ஜப்தி) இருந்தது. "தலை வாசல் மறியல், தண்ணிக்கிணத்து மறியல்" என்று ஆணையிடுவதும் உண்டு. அது வீட்டு வாயிலைத்தாண்டி தெருவுக்கு வரக்கூடாது. ஊர்ப் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்ற தண்டனையாகும்.

ஊரைப் பாதுகாப்பாகக் காக்க "நந்திரிமார்" என்ற படையினர் இருத்தனர். நாட்டைக் காக்கின்ற தலைவனுக்குப் “பாடிகாவல் வரியும்" காவல்காரனுக்குக் "காவல்வரியும்" அளிக்கப்பட்டது. உறுப்புக் குறைத்தலும் தூக்குத் தண்டனையும் கூட இருந்தது. தூக்குத் தண்டனைக்குத் 'தலைவிலை' என்று பெயர். பூந்துறை நாட்டார் “அனியாயம் அழிபிழை செய்தாரைக் கொன்றால் தலைவிலை இல்லை" என்று சாத்தம்பூரில் கூடித் தீர்மானித்தனர்.