பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

237


செட்டி பிள்ளையப்பன் புகழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. அந்தியூர், பெருந்தலையூர்க் கல்வெட்டுக்கள் இவர்களை 'நாட்டுக்காமிண்டன்' என்று அழைக்கிறது. பவானி, கோபி வட்டத்தில் பரவியுள்ளனர். அது வடகரைநாடு, காஞ்சிக்கோயில் நாட்டுப் பகுதியாகும். பாரியூர் இவர்கள் முதன்மைக் காணியூர்.

படைத்தலையர்

கொங்கு வேளாளர்களில் பொருளந்தை, சாத்தந்தை, மணியன், ஈஞ்சன், பூமன், புள்ளந்தை, மேதி, பயிரன், வாணி, சாத்துவாயர், வாணன் முதலிய பதினொரு குலத்தவர்கள் படைத்தலைவர் ஆகித் தனிப் பிரிவாயினர். "வெள்ளாளன் படைத்தலையரில் நேரிய மூவேந்த வேளான்" என்பது போலப் பெயர்கள் குறிக்கப்பெறும். இவர்களில் வாரணவாசி விசயநகர காலத்தலைவர். உலகுடையான் கோளவ இலக்கியம் பாடப்பட்டவர், விசயமங்கலம் பகுதியில் காணிகொண்டவர்கள்.

நாட்டார்

கொங்கு வேளாளரில் கண்ணன், விழியர், செல்லன், பண்ணை, மணியன் ஆகிய ஐந்து குலத்தார் காவிரிக்குக் கிழக்கே சென்று நாட்டு நிர்வாகம் செய்ததால் நாட்டார். நாட்டுக் கவுண்டர் எனப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் நாமக்கல் மாவட்டத்தில் வாழ்கின்றனர். ஈரோடு மாவட்டத்திலும் சிலர் உள்ளனர்.

திருவெம்படியர்

இறைவனுடைய உருவங்களைத் தாங்கியும் இறைபணியும் செய்த கொங்கு வேளாளர்கள் 'திருவெம்படிவக்கவுண்டர்' எனப்பட்டனர். "திருமுடிக்கவுண்டர்" எனவும் மக்கள் அழைப்பர். இவர்கள் காடை முதலில் ஏழு பிரிவினை உடையவர்கள் கொடுமுடி இவர்கள் முதன்மைக் காணியூர்.

குறும்பர்

குறும்பக் கவுண்டர்களைச் சிலம்பூர்க் கல்வெட்டு "காணியுடைய குறும்பர்" என்று குறிக்கிறது. "கொங்கில் குறும்பு" என்று அழைக்கப்-