பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

41. காணத்தக்க இடங்கள்


பவானி கூடுதுறை

காவிரி, பவானி, கண்ணுக்குத் தெரியாமல் அமுத நதி மூன்றும் கூடும் இடம், தென்னகத்தின் "திரிவேணி சங்கமம்". சம்பந்தர் பாடல் பெற்ற கோயில், கிரகண காலத்தில் இங்கு நீராடுவது சிறப்பு என்பர்.

பவானி கலெக்டர் மாளிகை

1799-1804 ஆண்டுகளில் கலெக்டர் மேக்ளியாட், வில்லியம் கேரோ தங்கிய பழைய மாளிகை. இன்றும் நல்ல நிலையில் உள்ளது.

தந்தக்கட்டில்

கலெக்டர் வில்லியம் கேரோ பவானிக் கோயிலுக்கு 11.1.1804ல் கொடுத்த தந்தம் போர்த்த கட்டில் பவானி சிவாலயம் அம்மன் பள்ளியறையில் உள்ளது,

காலிங்கராயன் அணை

1282இல் காலிங்கராயன் பவானி காவிரியோடு கலக்கும் இடத்தில் கட்டிய அணை. அணைத் தோப்பு, பவானி அருகில் உள்ளது.

பவானி சாகர் அணை

உலகின் மிகப்பெரிய மண் அணை. 1954இல் கட்டி முடிக்கப்பட்டது. சத்தியமங்கலத்தில் மேற்கே 25வது விலோ மீட்டரில் உள்ளது.

கொடிவேரி அணை

உம்மத்தூர்த் தலைவன் நஞ்சராயன் கட்டிய அணை, அணையிலிருந்து இரண்டு புறமும் கால்வாய்கள் (அரக்கன் கோட்டை, தடப்பள்ளி) உள்ளன.

கொடுமுடி

தேவார மூவரும், மாணிக்கவாசகரும் பாடிய தலம், நடராசரின் சதுரநடன படிமம் சிறப்பு வாய்ந்தது.