பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

ஈரோடு மாவட்ட வரலாறு


தொல்லியல் துறை ஆகியவை சார்பில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு வெளிப்படுத்தப்பட்ட பண்பாட்டை "நொய்யல்கரை நாகரிகம்” என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். கொடுமணல் தொல்லியல் பரப்பில் 10 விழுக்காடு கூட இதுவரை அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை. இங்கு மீண்டும் அகழாய்வு தொடர ஈரோடு மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

கம்பு, வரகு, சோளம் முதலிய புன்செய் சாகுபடியில் ஈடுபட்ட கொடுமணல் மக்கள் நல்ல எழுத்தறிவு பெற்று இந்தியாவின் பிற மாநிலங்களுடனும், இலங்கை, ஆப்கானிஸ்தான், உரோம் முதலிய நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு உடையவர்களாக இருந்தனர். அரிய வண்ணக் கல்மணிகள் பாசிகள் உருவாக்குதல், இரும்பு - எஃகு கருவிகள் செய்தல் போன்ற தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர்.

பெரில் என்ற பச்சைக்கல் படியூரிலும், சபையர் எனப்படும் நீலக்கல் சிவமலையிலும், குவார்ட்ஸ் எனப்படும் பளிங்குக்கல் கிடைக்கும் வெங்கமேடும் அரசம்பாளையமும் கொடுமணல் அருகேயும் உள்ளன. இவை ஓரளவு கொடுமணலிலும் கிடைத்தன. இவற்றுடன் ஆப்கானிஸ்தானத்து லேபிஸ் லசுலியும், குஜராத்தின் கார்னீலியன் என்ற சூதுபவளமும், இலங்கையின் பூனைக்கண் மணியும் கொடு மணலில் இறக்குமதி செய்யப்பட்டு அழகுமிகு அணிகலன்கள் உருவாக்கப்பட்டன.

ஏர் உழும்போதும், கால்நடை மேய்க்கும் பொழுதும், மழை பெய்த மண் அரிப்பிலும், கிழங்கு தோண்டும் போதும் கொங்கு நாட்டில் மணிக்கற்கள் கிடைத்ததாகப் பதிற்றுப்பத்துக் கூறுகிறது.

ஏராளமான மணிக்கற்களும் பாசிகளும் வீட்டுப் பயன்பாட்டு ஆயுதங்கள் என இரும்புப் பொருள்கள் பலவும் கிடைத்துள்ளன. செம்பு, வெள்ளி, தங்க உலோகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்குப் பொருள்கள். எலும்புப் பொருள்கள், சுடுமண் பொருள்கள், முத்திரை