பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

43


மலைகள்

செல்வக்கடுங்கோ வாழியாதன் தன்னைப் பாடிய கபிலருக்கு 'நன்றா' என்னும் குன்றேறி நின்று தன் கண்ணில் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் என்ற பதிற்றுப்பத்துப் பதிகம் கூறுகிறது. "நன்றா" என்னும் குன்று பவானி அருகில் உள்ள ஊராட்சிக்கோட்டை மலையாகும். திருஞானசம்பந்தர் பாடிய 'திருநணா" சங்ககால நன்றாவே ஆகும். பிற்காலத்தில் 'நணா', 'நண்ணாவூர்' என்ற பெயர் பெற்றது. பவானி சிவபெருமான் பெயர் "நண்ணாவுடையார்" என்பதாகும்.

நற்றிணையும், குறுந்தொகையும் குறிக்கும் "சென்னிக்கோடு" சென்னிமலை ஆகும். புறநானூறு குறிக்கும் 'ஏறைமலை' சிவமலை என்பர். அகநானூறு குறிக்கும் 'குறும்பொறை' இன்று சென்னிமலை அருகே ‘குட்டிக்கரடு" என்ற பெயரோடு வழங்குகிறது. குறுந்தொகை குறிக்கும் ‘நாகம்" என்பது அறச்சலூராக இருக்கலாம். அறச்சலூர் மலைக்கு ‘நாகமலை' என்று பெயர்.

புலவர்கள்

சங்க இலக்கியத்தில் பாடல் இடம் பெற்றுள்ள அந்தி இளங்கீரனார், பெருந்தலைச் சாத்தனார், பொன்முடியார், ஒரோடகத்துக் கந்தரத்தனார், மூலங்கிழார் ஆகியோர் அந்தியூர், பெருந்தலையூர், பொன்முடி, உலகடம், மூலனூர் ஆகிய ஈரோடு மாவட்ட ஊர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

ஊர்கள்

அகநானூறு குறிக்கும் "வெள்ளாடி" இன்றைய வெள்ளோடு ஆக இருக்கலாம். நன்னனும் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் போர் புரிந்த "வாகைப் பறந்தலை" விசயமங்கலம் ஆகும். விசய மங்கலத்தின் பழம்பெயர் வாகை. விசயமங்கலத்தை வாகைப்புத்தூர். என்று கல்வெட்டுக் கூறுகிறது. அங்குள்ள குளத்திற்கும், 'வாகைக் குளம்' என்று பெயர். வாகை என்ற தமிழ்ப் பெயரை 'விசயமங்கலம்'