பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

45




"புனல்பாய் மகளிர் ஆட ஒழித்த
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்"

என்று பதிற்றுப்பத்துக் கூறுகிறது.

கொங்கரும் கொங்கபூமியும்

மழவர், கோசர், வடுகர், வேடர், குறும்பர், ஆவியர், பூழியர் போலவே கொங்கர் என்பவர்களும் பண்டைய கொங்கின் இனக்குழு மக்கள் ஆவர். மழவர் வாழ்ந்த பகுதி மழகொங்கம் எனப்பட்டது. கோசர்கள் கொங்கு இளங்கோசர் எனப்பட்டனர். தாராபுரம், காங்கயம் வட்டங்களில் வடுகப்பிள்ளையாரும், வடுகநாதர் கோயிலும் உள்ளன. குறும்பர் வாழ்ந்த பகுதி குறும்புநாடு எனப்பட்டுக் குறுப்புநாடு ஆனது. வேடர்கள் கொங்குநாட்டின் பூர்வீகக் குடிகளுள் ஒருவர். பிற்கால அவர்கள் தலைவன் 'கொங்குராயன்' எனப்பட்டார். கொங்களும் கொங்கு நாட்டின் பழங்குடிகளே.

மழகொங்கம், கொங்கபூமி, குடகொங்கு என்ற கொங்கு நாட்டின் பண்டைய முப்பெரும் பிரிவுகளுள் ஈரோடு மாவட்டப் பகுதியும் தெற்கிலும் மேற்கிலும் அதனைச் சேர்ந்த பகுதிகளும் தான் 'கொங்கபூமி' எனப்பட்டது.

ஈரோடு மாவட்டப் பகுதியில் தான் கொங்கூரும், கொங்கு வஞ்சியும். கொங்குப் பெருமாள் கோயிலும், கொங்கில் அம்மன் கோயிலும், கொங்குப் பெருவழியும் உள்ளன. இங்கு பண்டைய அளவு கருவிகள் கூட கொங்கு, கொங்கு நாழி, கொங்கு முறம் எனப்பட்டது. கொங்கம்பாளையங்களும் இங்கு உள்ளன. எனவே கொங்குக்கு உரிய 'கொங்கர்' ஈரோடு மாவட்டத்திற்கு உரியவர் ஆவர். சுந்தரமூர்த்தி நாயனாரும், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் உள்ள குரக்குத்தளியைத் தான் "கொங்கில் குறும்பில் குரக்குத்தளி" என்று பாடியுள்ளார்.

கொங்கர் போர்த்திறன்

கொங்கரின் போர்த் திறமையைப் பற்றிச் சங்க இலக்கியம் புகழ்ந்து பேசுகிறது. அவர்கள் எறிகின்ற கல்கவணால் வலிமையான கோட்டைச் சுவர்களும் இடியுமாம்.