பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

8. இரட்டர், கங்கர் காலம்


(கி.பி. 250 - 870)

சங்க காலத்தை அடுத்து ஈரோடு மாவட்டப் பகுதியை இரட்டர் என்ற மரபினரும், கங்கர் என்ற மரபினரும் ஆட்சி செய்தனர். அவர்களைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் மெக்கன்சியின் ஆவணங்களிலேயே மிகவும் சிறந்ததாகக் கருதப்படும் "கொங்கதேச ராசாக்கள்" என்ற நூல் இரட்ட மரபின் ஏழு அரசர்களைப் பற்றியும் கங்கர்களைப் பற்றியும் கூறுகிறது.

இரட்டர்

வீரராய சக்கரவர்த்தி, முதலாம் கோவிந்தராயன், கிருஷ்ணராயன், கலாவல்லவராயன், இரண்டாம் கோவிந்தராயன். கன்னர தேவன், திரிவிக்கிரம தேவன் என்ற ஏழு அரசர்களின் பெயர்கள் வரிசையாகக் கூறப்பட்டுள்ளன.

முதல் ஆறு அரசர்களும் சமண சமயம் சார்ந்தவர்கள். கடைசி அரசன் திரிவிக்கிரமதேவன் சங்கரதேவரால் சைவ சமயத்துக்கு மாறினான். இவர்கள் அனைவரும் 'ஸ்கந்தபுரம்" என்ற கொங்குநாட்டு ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். தாராபுரம் அருகில் உள்ள 'கொங்கூர்' என்பதே ஸ்கந்தபுரத்தின் பழம்பெயராகும்.

இவர்களால் ஈரோடு மாவட்டப் பகுதியில் சமண சமயம் செழித்து வளர்ந்தது. பொம்ம கொம்மன், அரிஷ்டனன் என இந்த ஆவணத்தில் வரும் பெயர்கள் பொம்முடி, கொம்மக்கோயில், அரிஷ்ட நேமிமலை (அரசண்ணாமலை) ஆகியவற்றோடு தொடர்புள்ளதா என்பது ஆய்வுக் குரியது. இவர்களால் ஆதரிக்கப்பட்ட சமணர்கள் நந்திகணம் சார்ந்தவர்கள்.

கங்கர்

இரட்டர்களுக்குப் பின் கி.பி.405 முதல் ஆதித்த சோழன் கொங்கு நாட்டைக் கைப்பற்றிய கி.பி.870ஆம் ஆண்டு வரை 21 அரசர்கள் கங்க மரபில் ஈரோடு பகுதியை ஆட்சி புரிந்தனர்.