பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரிமை வேட்கை

அன்னியர்கள் இந்நாட்டில் வாணி கத்தில்
அடிக்கின்ற பகற்கொள்ளை தனை ஒழிக்கத்
தன்முதுகில் துணிமுட்டை தூக்கி விற்றுத்
தனக்குள்ள சொல்வன்மை யாலே, மக்கள்
புன்கருத்தைப் போக்கியிந்த நாட்டி லுள்ளார்
புலையரென்றும் கடையரென்றும் ஒதுக்கப் பட்ட
இந்நிலையை ஒழித்துவிட எண்ணி நாளும்
எழுதிவந்தார், பேசிவந்தார் ஈரோட்டண்ணல்!

உடலுக்குத் தீமைதரும் கள்ளிற் செல்வம்
ஒங்குவதைக் கண்டந்த வெள்ளைக் காரர்
கடமையினை எண்ணாமல் ஆளும் போக்கில்
கள்ளினுக்குக் கடைபெருக்கக் கண்டார் காந்தி!
உடனொழிக்க வேண்டுமெனச் சித்தங்கொண்டார்
ஓங்கியதே பெரும்புரட்சி தமிழர் நாட்டில்
அடலேறு போலிளைஞர் ஈரோட் டண்ணல்
அன்றெழுந்தார்! தமிழர்களும் உடனெ ழுந்தார்!