பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/264

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
262
உடற்கல்வி என்றால் என்ன?

தனியாக தான் மனிதர்கள் பிறக்கின்றார்கள் என்றாலும் சேர்ந்து வாழத்தான் வேண்டும் என்ற நியதிக்கு ஆட்பட்டுப் போகின்றார்கள். அது ஒரு கட்டாய சுதந்திரமாகவே இருந்து வருகிறது.

ஆனாலும், சமுதாய அமைப்பானது மக்களின் முன்னேற்றம் கருதியே இருந்து வருகிறது. இப்படி உள்ள அமைப்பானது, தனிமனித உரிமைகளைக்காக்கவும், பிற தாக்குதல்களிலிருந்து காப்பாற்றவும், அவர்கள் தங்களைத் தங்கள் திறமைகளுக்கேற்ப வளர்த்துக் கொள்ளவும், அரணாக இருந்தும், அணையாக இருந்தும் காத்து உதவுகிறது.

காலங்காலமாக கூடி வாழ்ந்து வந்த மக்களும், தாங்கள் பெற்ற அனுபவங்களுக்கேற்ப, அவ்வப்போது விதிகளையும் முறைகளையும் மாற்றி மாற்றி அமைத்து, மரபுகளாக, மாண்புகளாக வழியமைத்துச் சென்றனர்.

சமுதாயமானது, தம்மைச் சார்ந்திருக்கிற மக்களிடமிருந்து நற்பண்புகளை, மரியாதை மிக்க நடத்தைகளை, கூடிஉறவாடுகிற குணங்களை, இனிமையான இலட்சியச் சிந்தனைகளை, இதமான செயல்முறைகளை எல்லாம் எதிர்பார்க்கிறது.

ஒருவர்க்கொருவர் உதவிக் கொள்வது, உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் உறவாடுவது, தங்கள் கடமைகளைத் தயங்காமல், நிறைவேற்றுவது போன்ற தலையாய பண்புகளையும் சமுதாயம் எதிர்பார்க்கிறது.

இத்தகைய சமுதாய எதிர்பார்ப்புகளை, உடற்கல்வி எவ்வாறு நிறைவேற்றுகிறது? எவ்வாறு நிறைவேற்றிட வேண்டும் என்ற ஒரு சில குறிப்புக்களை இங்கே காண்போம்.