பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தகைய அரிய தொகுப்பினை வெளியிட ஆகும் பெருஞ் செலவை ஏற்க இன்று யார் உள்ளார்?' என்ற எண்ணம் வந்தபோது நான் உள்ளேன் என்று முன்வந்தார் - ஈத்துவக்கும் இன்பத்தைக் கண்டறிந்த கரூர் வள்ளல் திரு. கே.சி. பழனிசாமி அவர்கள். 'யார் ஏந்துவார் இச்செலவை என்று நாங்கள் ஏங்கித் தவித்திருக்கையில் நான் ஏந்துவேன்' என்று உவந்து வந்து தோள் ஏற்ற அப்பெருமகனார் தமிழ்ப்பற்றையும், கவிப்பற்றையும் என்னென்று போற்றுவது எச்சொல்லால் ஏத்துவது அப்பெருமகனார் எல்லா நலமும் எய்தி வாழ இதயம் நெகிழ இனிதாக வாழ்த்துகின்றோம். எங்கள் தந்தையாரின் கவித்துவத்துக்கு நெஞ்சம் பறிகொடுத்தோர் மிகப் பலர்- அவர் சந்த வெள்ளத்தில் நீந்தித் திளைத்தவர்கள் மிகப் பலர். அவர் புரட்சி எண்ணங்களில் உள்ளம் பூத்துப் போனவர்கள் மிகப் பலர் - அவர்களுள் கலைவாணர் ஒப்பற்றவர். கலைவாணரும், கவிராயரும் இணைபிரியா நட்புப் பூண்டவர்கள் - இந்த நூற்றாண்டின் 'கபில பரணர்'கள் இருவரும். 'கவிராயரால் கலைவாணர்க்குப் பெரும்புகழா? கலைவாணரால் கவிராயர்க்குப் பெரும்புகழா?' என்று மேடையிடாத பட்டி மன்றங்கள் அன்று தமிழ் மக்களின் நெஞ்ச மேடையில் நிகழ்ந்து வந்தன என்பது உண்மை. கலைவாணர் மறைவுக்குப் பின் அவர் பிடித்திருந்த இடத்தைக் கவிராயர் உள்ளத்தில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் சிக்கெனப் பிடித்தார்கள். 'கலைமாமணி' என்னும் பெருமைக்குரிய பட்டத்தினைத் தமிழ் மக்களின் சார்பாகத் தமிழக அரசால், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எங்கள் தந்தையார்க்கு நல்கினார்கள். உடுமலையில் எங்கள் தந்தையார்க்கு மணிமண்டபம் எழுப்பி மாயாப் புகழுக்கு வழி வகுப்பவரும் முதலமைச்சர் கலைஞரே ஆவார்கள். அப்பெருமகனாரின் தமிழாய்ந்த நெஞ்சுக்கு எங்கள் குடும்பத்தினரின் நன்றி மலர்கள் என்றும் உரியன.