பக்கம்:உணர்வின் எல்லை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

உணர்வின் எல்லை

பாடப்பட்ட உணர்வுடைய கலைச் செல்வங்களே சங்க இலக்கிய மருதத்திணைக் கவிதைகள் என்னும் வாய்மை தெள்ளிதின் விளக்கும்.

பழந்தமிழ் நாட்டு மருதத்தலைவன் அழகிற் சிறந்தவன்; அடலாண்மை மிக்கவன்; அருளாளன்; ஈந்துவக்கும் இன்பத்தைப் பெரிதெனப் போற்றும் பண்பாளன்; கலைச்செல்வன்; ஆடல் பாடல்களில் எளிதில் நெஞ்சைப் பறிகொடுக்கும் நீர்மையன்; குற்றமுணர்ந்து குணவானாகும் பெற்றியுடைய பெருந்தகை; மனைவியை மதிக்கும் மாண்புடையோன்; தன் செயல் தவறென உணர்ந்த நிலையில் தலைவிபால் மன்னப்புக் கேட்கவும் கூசாத கொள்கையன். இச்செய்திகளெல்லாம் எவ்வளவு அழகாக ஒரு பெரியாரால் மருதக் கலியில் சித்திரிக்கப்பட்டுள்ளன பாருங்கள்: தலைவி ஒருத்தி தன் காதற் கணவனைப்பற்றித் தன் மகனிடம் கூறும் செய்தியாய் அப்பாட்டு அடைந்துள்ளது. தாய் பிள்ளையிடம் பேசுகிறாள்.

'என் செம்மலே, நீ அழகால் உன் தந்தையாரை ஒத்திருக்கின்றாய். உன் தந்தையார் மாற்றாரை வென்று களங்கொள்ளும் வெற்றிவீரர்; நுகத்துப் பகலாணி போன்று நடுவுநிலை திரியாது முறை செய்தலில் வல்லவர்; வேண்டியார்க்கு வேண்டுவன விரும்பி அளித்துப் புரக்கும் அருளாளர். செல்வமே, நீ அவரைப்போல வீரத்தாலும் நடுவு நிலையாயாலும் ஈகையாலும் சிறந்து விளங்குவாயாக! ஆனால், மனம் ஒன்றுபட்டு வாழும் காதலியைப் பிரிந்து வாழும் பண்பு-அவர் கவின் கெடுமாறு