பக்கம்:உணர்வின் எல்லை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

உணர்வின் எல்லை

தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்:
அடவிக் கானகத்து ஆயிழை தன்னை
இடையிருள் யாமத்து இட்டுநீங் கியது
வல்வினை அன்றோர் மடந்தைதன் பிழையெனச்

சொல்லலும் உண்டேல், சொல்வாயோ நீ!’

இவை கவுந்தி அடிகளின் ஆறுதல் மொழிகள். இதிகாச காலத்துக் கதைகளும், இலக்கியங்களும் கோவலன் வாழ்க்கையில் ஆற்றொணாப் புண்ணை அற்ற வல்ல மருந்தாகப் பயன்படும் மாயம் இவ்வடிகளில் விளங்குகின்றதன்றே![1]

அன்று வாழ்க்கையில் இலக்கியம் பெறும் சிறப்பினை ஆராயும்போது சமய நூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. இவ்வுண்மை சமய உணர்ச்சி மிக்க கீழ்த்திசை நாடுகளில் மட்டுமல்லாமல், மேற்றிசை நாடுகட்கும் பொருந்தியுள்ளது. அதனாலே தான் அந்நாட்டு அறிஞர்களுள் ஒருவர், “பண்டிதர்கள் பிளாட்டோவிலிருந்து மேற்கோள்களைக் காட்டலாம். ஆனால், இலட்சக்கணக்கான மக்கள், பைபிளிலிருந்தே மேற்கோள்களைக் காண்கின்றார்கள். அன்றாடம் உழைத்து ஓய்ந்து போகும் வாழ்க்கையில், உறுதியும் உரமும் அவர்கட்கு அந்த நூலிலிருந்தே கிடைக்கின்றன!”[2] என்றார்.


  1. இவ்வாறே இராமாயணத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி சங்கப்புலவர் ஒருவரால் உவமையாக எடுத்தாளப் பெறுதலைப் புறம். 738 லும் காணலாம்.
  2. ‘Scholars may quote Plato in their studies, but the hearts of millions will quote the Bible at their daily toil and draw strength from its inspiration’