பக்கம்:உத்திராயணம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தராயணம் 11



நெற்றி கொப்பளிக்கிறது. இந்த திடீர் மூட்டம் எப்படி வந்தது? புழுக்கம் எனக்கு மூச்சுத் திணருகிறது. காற்றின் ஓட்டத்தை ஆகாயப் போலீஸ்காரன் 'ஹோல் ஆன்' பண்ணி விட்டு என்ன கேஸ் எழுதுகிறான்?

தரையிலிருந்த குப்பை எல்லாம் வாரி, முகத்தில் தூவிக் கொண்டு ஒரு பெருமூச்சுக் கிளம்பி, சுழல் காற்றாக மாறுகிறது. ரஸகுண்டு போல் நீர் கோர்த்துக் கொண்ட மேகங்கள் ஒன்றுடன் ஒன்று இடித்துச் சீர்குலைகின்றன. ஒன்றிரண்டு.புஷ்பங்கள் கூட மேலே உதிர்கின்றன. வானம் ஒரேயடியாய் இருள்கின்றது. இதோ ஆகாச கங்கை அவிழப் போகிறாள். ஈஸிச்சேரை மடக்கிட வேண்டியதுதானா?

இல்லை. ஆர்ப்பாட்டத்துடன் சரி. எண்ணெய் கடைச்செட்டியார் சத்தம் போடாத சிரிப்பில் முகம், தோள், தொந்தியெல்லாம் பிசைந்த மாவாய்க் குலுங்குவதுபோல், தனக்கே உரிய ரகசிய சிரிப்பில் மூட்டம் கலைந்துவிட்டது. வானத்தில் இங்குமங்குமாய்ப் பிசுபிசு பஞ்சு மிட்டாய்ப் படர்ச்சிகள். புலு புலு ரோஜா மொக்குகள். கசங்கிய மாலியங்கள் சிதறிக் கிடக்கின்றன. இருளை இதமாய், நல்ல வார்த்தை சொல்லி ஒதுக்கிவிட்டு மலர்ந்த மினுமினு வெளிச்சம், இடத்துக்கே தண்ணொளியை வர்ணமாய்த் தீட்டுகிறது. ஏதோ ஒரு abstract ஓவியம் உருவாகிக்கொண் டிருக்கிறது.

பகல் கனிந்து பழம்போல் நழுவி இருளின் திறந்த வாய்க்குள் விழப்போகும் ஒரு தினுசான அச்சம் தரும் இசைகேடான முகூர்த்தம். கயிறுமேல், கழைக் கூத்தாடியின் கர்ணத் தருணம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சமயங்கள் ஒருங்குகின்றன. சாமக்ரியைகள் சேர்கின்றன, காத்திருந்த ஒரையும் வருகின்றது, நேர்கிறது, கடக்கிறது. கழிகிறது. இருளும் ஒளியும் கலந்த வேளை, ஆனால், இதோ இரவு தோன்றிவிட்டேன் எனும் அந்தக் கலவை நேர்ந்த அந்த அசல் சமயம், அந்த ரஸ்வாதம்: நம் இத்தனை காவலையும் நழுவிவிடும் ஜாலம் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/21&oldid=1155187" இலிருந்து மீள்விக்கப்பட்டது