பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175


“தலைவரே!” என்று ஜபாரக் மறுத்துக் கூற முன் வந்தான்.

“உன்னையும்தான். நீயும் போய்விடு. இந்த இடத்தில் பிளேக் வியாதி (கொள்ளை நோய்) இருக்கிறதென்பது உனக்குத் தெரியவில்லையா? போ! போ” என்று விரட்டினான்.

மிதப்புத் தோணி ஆற்றைக் கடந்து சென்றது. உமார் அதிலிருந்து கவனித்தான். மனிதர்களும், ஒட்டகங்களும், மிருகங்களும் கண்ணுக்கு மறைந்து விட்டார்கள். அவன் தங்கியிருந்த கூடாரம் எரியும் புகை மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. வளையம் வளையமாக எழுந்த அந்தப் புகை, பாலைவனத்துத் தூசித் திரையை இருளச் செய்தது. கதிரவன் உச்சிக்கு ஏறியதும் அதுவும் மறைந்து விட்டது.

கதிரவன் ஒரு பெரிய விளக்குபோலத் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. அதைச் சுற்றி மேகங்கள் வானத்தை அலங்கரிக்கும் கொடிகள் போல விளங்கின. ஆற்றின் இருபுறமும் தெரிந்த சாம்பல் நிறமான மணல்வெளி ஒரே வெட்டவெளியாக, ஒன்றுமில்லாத தன்மையுடன் காட்சியளித்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலே எதுவும் இல்லை. அவனுடன் கூட வந்த கூட்டம் வெட்ட வெளியிலே கலந்து மறைந்துவிட்டது. கூடாரத்தை எரித்துச் சாம்பலாக்கிய நெருப்பு அவன் உள்ளத்திலே, உடலிலே எரிந்து கொண்டிருந்தது.

ஆற்றின் அக்கரை சேர்ந்ததும், உமார் தண்ணிர் குடிப்பதற்காக ஆற்றிற்குள்ளே இறங்கப் போனான். கூடவே வந்த ஜபாரக் அவன் தோள்களைப் பிடித்து நிறுத்தினான். “தலைவரே! அது ஆறு! இறங்காதீர்கள்! சாவு நேரிடலாம்!” என்று தடுத்தான்.

இறங்கிய அவன் கால்களை அடித்துத் தள்ளிக் கொண்டு அந்த ஆறு பெருக்கெடுத்தோடியது. கரையோரத்துக் களிமண் சிறுசிறு துண்டுகளாக ஓடும் நீரில் விழுந்து கரைந்து மறைந்து கொண்டிருந்தது. கரைக்கு இழுத்து வரப்பட்ட உமார். தரையிலே உட்கார்ந்து கொண்டு ஓடும் வெள்ளத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்திலே ஒட்டகச் சாரியின் மணியோசை அவன் காதுகளிலே ஒலித்தது. கரையில் இருந்த தங்கும் இடத்தில் அந்தப் புதிய வியாபாரிகளின் கூட்டம் வந்து