பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185



“நேற்றுக் கொள்ளை கொடுத்தேனே பட்டுத் துணி மூட்டைகள் அவற்றின் விலைமதிப்புக்குச் சமமானது இந்த செயல்” என்றான் அந்த அர்மீனியன். அவனுடைய புன்சிரிப்பும், மேற்கண்ட சொற்களும் ஜபாரக்கிற்கு எதையும் புரிய வைக்கவில்லை. நிசாம் அவர்களின் ஒற்றர் தலைவன் டுன்டுஷை உமாரின் நேரடி எதிரியாக நிறுத்தவே இந்த வேலையைச் செய்கிறான் என்று யூகிக்க முடிந்ததே தவிர, இவனுக்கும் டுன்டுஷுக்கும் என்ன பகை என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.


26. ஆராய்ச்சியில் நேர்ந்த அதிசயத் தவறு

நிசாப்பூர் ஆற்றங்கரையில் இருந்த விண்மீன் வீட்டிலே பேராசிரியர் குவாஜா மைமன் இபின் நஜீப் ஆலவைஸ்தி என்ற பாக்தாது தேசத்துக் கணிதப் பேராசிரியன் ஆராய்ச்சிக் கூடத்திலே உட்கார்ந்திருந்தான். அந்தக் கிழவனுக்குப் பக்கத்திலே உர்கண்டு ஆராய்ச்சிக்கூடத்தைச் சேர்ந்த முசாபர் அல் இஸ்பிகாரி என்ற பேராசிரியன் ஒருவனும், கடந்த ஓராண்டு காலமாக அவர்களுடன் கூட வேலை செய்த மற்ற அறுவரும் உட்கார்ந்திருந்தார்கள்.

ஓராண்டு காலமாக அவர்கள் செய்து வந்த ஆராய்ச்சியின் பலன் எதிரிலே இருந்த மேசைமேல், எழுதப் பெற்ற காகிதங்களாகக் கிடந்தது. அவற்றிலே, குறிப்பிடப் பட்டிருந்த கணக்கு விவரங்கள் அவர்களுடைய தினசரி ஆராய்ச்சிக் குறிப்புகளாகும். பேராசிரியர் மைமன், தங்கள் வேலையின் பயனைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு முன்னரே அங்கு வந்து சேர்ந்த உமார் அங்கு கிடந்த மெத்தை தைத்த நாற்காலியில் கையையும் காலையும் நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தான். மேலைத் தேயத்திலிருந்து திரும்பிய அவனைப் பார்த்த மைமனும் மற்றவர்களும், அவன் குடிமயக்கத்தில் இருக்கிறான் என்று எண்ணினார்கள். அவன் குடிக்காத போதும் கூடக் குடிகாரனைப்போலவே தோன்றினான். சுற்றிலும் ஆட்க்ள் இருக்கும்பொழுதே, தனக்குள்ளே மெல்லிய குரலிலே ஏதோ பாட்டை இராகம் இழுத்துக் கொண்டிருந்தான்.

மேலும் அவனுக்குப் பின்னாலே அருவருப்பான உடலமைப்புடைய விகடன் ஒருவனும், நரைத்த தாடிக்காரன்