பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

மாறுபாடுகளைப் பற்றியும் அதன் பேராற்றலைப் பற்றியும் வியந்து கொண்டிருந்தான்.

இப்படி மதுவோடு போராடிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே, வானிலையாராய்ச்சி செய்வதாகக் கூறிக் கொண்டு கோட்டைச் சுவர்களிலே ஏறி நின்று கொண்டு, கீழே இறங்கித் தப்பித்தோடுவதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருந்தான். சிறையிலே அடைபட்டவர்கள், பெண்களின் கூந்தலைக் கயிறாகத் திரித்தும், கிழிந்த கம்பளித் துணிகளைப் பயன்படுத்தியும், இது போன்ற கோட்டைகளிலிருந்து தப்பி யோடியதாகக் கதை சொல்லக் கேட்டிருக்கிறான் உமார். ஆனால், கயிறு திரித்துக்கதை சொல்லுவது எளிது என்றும் அந்தக் கதைகளிலே கூறுகிறபடி கயிறு திரித்துத் தப்புவது கடிது என்றும் அறிந்தான்.

சில சமயங்களில், பக்கவாட்டிலே செல்லும் சிறு வழிகள் மூலமாக வெளியேற முயற்சித்து, அங்கு காவல் நின்ற அடிமைகளின் ஆயுதத்தால் உள்ளுக்கு விரட்டப்பட்டான். இப்படி அவன் முயற்சி செய்ததை அவர்கள் சொல்லி விடுவார்களே என்று அஞ்சத் தேவையில்லாமல் இருந்தது. ஏனெனில், அவர்கள் அந்தக் கரிய அடிமைகள் ஊமைகளாயிருந்தார்கள். கோட்டைக்குள்ளே எந்த இடத்திலும் ஆயுத சாலை கிடையாதென்பதைக் கண்டு பிடித்து மன அமைதி கொண்டான். பூதாகரமான நீக்ரோக்களும், கோட்டைச் சுவர்களைக் காத்து நின்ற அர்ப்பணம் செய்தவர்களும் தங்கள் கைகளிலே ஆயுதம் வைத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் அந்த ஆயுதங்களை, வேலை நேரத்திலும், வேலையில்லாத நேரத்திலும் எப்பொழுதும் தங்களிடமே வைத்திருந்தார்கள்.

அர்ப்பணம் செய்தவர்கள் வாழும் பகுதிக்கு அவன் போக முடியாமல் இருந்தது. காவல் நிற்பவர்களிலே யாராவது ஒருவனிடம் பேச்சுக்கொடுத்து, தன் வழிக்கு இழுத்துக் கொள்ளலாம். அவனைக் கொண்டு தப்பலாம் என்றால் அதுவும் இயலாத செயலாக இருந்தது. ஏனெனில், அவர்களோடு பேசுவதைக் காட்டிலும் காட்டுப் புலிகளுடன் சினேகம் செய்து விடலாம். அதுவுமின்றி அவர்கள் தனியாளாகக் காவலுக்கு நிறுத்தப்பெற்றதில்லை, மூன்றுபேர் அல்லது ஏழு பேர் சேர்ந்த ஒவ்வொரு குழுவாக நிறுத்தப் பெற்றிருந்தார்கள்.