பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322


அர்ப்பணம் செய்தவர்கள் என்ற கூட்டத்தாரில் சிலர் எப்போதாவது சிறுசிறு குழுக்களாக வெளியே செல்வதும், உள்ளே வருவதுமாக இருந்தார்கள். எப்போதாவது ஒருமுறை பிரசாரகர் ஒருவர் அல்லது இருவர் வெளியே செல்வதும் அல்லது உள்ளே வருவதும் உண்டு. அவர்கள் பிரசாரத்திற்காகவும், வெளியுலக நடப்புகளைத் தெரிந்து வருவதற்காகவும் அனுப்பப்படுவதுண்டு. ஆனால், ஹாஸானை உமார் அதன் பிறகு பார்க்கவேயில்லை.

மூன்று நாட்கள் தொடர்ந்து கவனித்ததில் ஓர் உண்மை உமாருக்குப் புலப்பட்டது. ஒருநாள் இரவு சிறுகதவு வழியாக அடையாளச் சீட்டுக் காண்பித்து வெளியேறிய அந்த நெட்டையான பிரசாரகன். பிற்பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் வெளியே செல்வதும், அரைமணி நேரம் கழித்து உள்ளே வருவதுமாக இருந்தான். குறிப்பிட்ட நேரத்தில் நடக்கும் இந்தச் செயல் உமாரின் புத்திக்கு வேலை கொடுத்தது. அந்தப் பிரசாரகனின் நடையைக் கவனித்தபோது அவன் ஹாஸான் என்பது பளிச்சென்று தெரிந்தது.

சைனாக்காரனைப்போல் வேஷம் போட்டுக்கொண்டு, பிரசாரகனுடைய உடையில் ஹாஸான் தினமும் மாற்றுருவில் ஏன் வெளியே சென்று வருகிறான் என்பதையும் ரே நகரிலிருந்து யாருக்கும் தெரியாமல் கழுகுக்கூட்டுக்கு வந்துவிட்டான் என்பதையும் பொருத்திப் பார்க்கிறபோது, தன் மாயவித்தையால் தன் கூட்டத்தாரின் கண்ணுக்குப் பெரிய தேவதூதன்போல் காட்சியளிக்கும் ஹாஸான், தான் வெளியே போவதும் வருவதும் மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் தன் தெய்வீகத் தன்மையை நிலை நிறுத்தவும் இந்த மாறுவேடம் போடுகிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.

தலைவாசலில் காவல் இருப்பவர்களான அர்ப்பணம் செய்தவர்களுக்கும் பிரசாரகர்களுக்கும் தொடர்பில்லாதபடி இரு பிரிவுகளாக அவர்கள் இருப்பதால், காவல் வீரர்களுக்கு எல்லாப் பிரசாரகர்களையும் அடையாளம் தெரியாது அவர்கள் உடையே சரியான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரசாரகர்களே ஹாஸ்ானைப் பார்க்க நேர்ந்தால் யாரோ புதிதாக மதத்திலே சேர்ந்தவர் என்றே எண்ணிக்கொள்வார்கள்.