பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

வேண்டுகிறேன். சிலநல்ல ஜமுக்காளங்களும், தலையணைகளும், சீனத்துப் பட்டுத் திரையொன்று, வெள்ளித் தண்ணீர் குடம் ஒன்றும் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று உமார் கூறினான்.

“வல்லாஹி! வான நூல் ஆராய்ச்சிக்கு இத்தனை பொருள்கள் தேவைப்படுவது இல்லையே. இவையெல்லாவற்றையும் உனக்குக் கொடுக்கிறேன். ஆனால், அதற்கொரு கட்டுப்பாடு இருக்கிறது. அது என்னவென்றால், உன்னுடைய மாலஸ்கார்டு சோதிடம் அர்த்தமற்றது என்று யாருக்குமே நீ சொல்லக்கூடாது.

“நான் சொல்லவில்லை?”

“அப்படி யாரும் கேட்டு நீ சொல்ல வேண்டி நடந்து விட்டால், அது கடவுளின் அருள் வாக்கு என்று சொல்லிக் கொள்ளலாம்” என்று டுன்டுஷ் கூறினான்.

“அப்படியே! நீங்கள் சொல்கிறபடியே செய்கிறேன்” என்று உமார் மகிழ்ச்சி பொங்கக் கூவினான்.

“ஆமாம், பட்டுத் திரையும், வெள்ளித் தண்ணிர்ப் பானையும் கேட்டாய், உணவைப் பற்றியும் வேலையாட்களைப் பற்றியும் கேட்கவில்லையே. சரி! இந்தா இதை வைத்துக் கொள்” என்று பணம் அடங்கிய சிறுபையொன்றைக் கொடுத்து, டுன்டுஷை உமாருக்காக இரண்டு வேலைக்காரர்கள் சேர்த்துக் கொடுக்கும்படி கூறினார்.

உண்மையில் உமார் தன்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை. பூப் போட்ட அந்தப் பணப்பையை ஒருமுறை புரட்டிப் பார்த்தான். இதுவரை அவன் இவ்வளவு பணம் கண்டதில்லை. அவனுக்கு ஒரு விதமான இன்ப உணர்வு பெருக்கெடுத்தது.

“அந்தக் கோபுரம் என்வசம் எப்பொழுது கிடைக்குமென்று அறிந்து கொள்ளலாமா?” என்று உமார் கேட்டான்.

நிசாம் டுன்டுஷைத் திரும்பிப் பார்க்க, “நாளை நடுப்பகல் நேரத்துக்குள் எல்லாம் தயார் செய்து விடுகிறேன்” என்றான்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யக்கூடிய அதிசய வித்தையின் தன்மையை உமார் உணர்ந்து கொண்டான்.