பக்கம்:உயிரின் அழைப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

மேல்துண்டை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு அடக்கத் தோடு அழைத்த பரஞ்சோதியின் குரல் வாலாம்பாளை நினைவு கொள்ளச் செய்தது! "எங்கேடாப்பா வந்தே?" என்றாள் வெறுப்பும் வேண்டாமையுமாக.

"அம்மாவைப் பார்க்கத்தானுங்க ; நாளைக்கு ஆடி கடை வெள்ளிக்கிழமையாச்சே, தாழம்பூ ஏகத்துக்கு ஆப்பிடுது தாழம்பூப் பாவாடை, தவன ரவிக்கை, கனகாம்பரத் தாவணியா வச்சுடவா... எப்படின்னு......"

குபீரெனச் சிவந்தது வாலாம்பாள் முகம்! அவள் வாயிலிருந்து சொற்களும் தீக்கங்குகளாக உதிர்ந்தன! அப்பா பரஞ்சோதி, அந்த அம்பாளுக்கு பாவாடையும் சித்தாடையும் சாத்தின வரைக்கும் போதும். ஏழுவருஷ காலமா, நாள் தவறாமல் அந்திசந்தி இரண்டு வேளையும் அவள் சன்னதியில் நெய்விளக்கேற்ற வீட்டில் இரட்டைப் பசுமாடு கறவை! தெரியுமா உனக்கு? என் கண்ணான குழந்தை தன் கையாலேயே பூச்செடி வச்சு, ஜலம்கொட்டி, பாத்தி கட்டி, வளர்த்த பூச்செடிகளிலிருந்து பூப்பறித்து மாலை, அர்ச்சனைக்கு உதிரி ! தினம் ஒரு வேளை சாப்பாடு, தரையிலே தலைப்பை விரிச்சுப் படுக்கை, வாயிலே, அம்பாளின் ஜபம். இன்னும் என்ன கடினசேவை உண்டு உலகில்? அவள் சன்னதியில் நின்று, கரைந்து உருகி, அழுது தொழுகிறதே என் குழந்தை, அந்தக் கோயிலிலிருப்பது அருள் புரியும் அம்பிகையா, வெறும் கருங்கல்லா? அவள் அம்பிகையானால் கட்டாயம் அவள் நெஞ்சு உருகியிருக்கும்! இல்லை! அது வெறும் கற்சிலை!

"அதனாலே நாளையிலிருந்து என் வீட்டிலிருந்து ஒத்தை பூ வராது! நெய் விளக்கும் ஏற்றப்போவதில்லை.

"ஆமாம்! என்றைக்கு அவள் என் குழந்தைக்கு வாழ்வைத் தருகிறாளோ, அன்றைக்கு அவளுக்கு பிரம்ம உற்சவமாக நடத்திவைக்கிறேன். அதுவரை அவள் இருக்கும்