பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதல் அத்தியாயம்

உயிரின் தோற்றம் - இரு கருத்துகள்

உயிரென்றால் என்ன? இயற்கை விஞ்ஞானத்தின் ஒரு மிக முக்கியமான பிரச்சினை இது. படித்தவராயினும் சரி, இல்லாவிடினும் சரி, இக்கேள்விக்கு ஏதாவது ஒரு வகையில் விடையளிக்கத்தான் செய்கிறார். எந்த ஓர் உலகத் தத்துவமும் இக்கொள்கைக்கு விடையளிக்காமல் நிலைகொள்ள முடியாது.

புராதன காலமுதல் உயிரின் தோற்றத்தைப்பற்றி மனிதன் சிந்தித்து வருகிறான். இக்கேள்விக்கு விடைகாண்பதற்கு மனப்பூர்வமாக முயலாத தத்துவாசிரியனோ தத்துவமோ இல்லையென்றே சொல்லலாம். நமது அறிவு வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டத்திலும், இக்கேள்விக்கு பல்வேறு விடைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவையாவும், கருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம் என்ற இரண்டு உலகத் தத்துவங்களின் நீண்ட முரண்பாட்டைக் காட்டும்.

நம்மைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழ்நிலையை நாம் பொதுவாக இரு பிரிவாகக் காண்கிறோம். ஒன்று உயிருள்ளன. மற்றொன்று உயிரில்லாதவை.

உயிருள்ளனவற்றில் ஆயிரக்கணக்கான வகைகளுள்ளன. அவற்றுள் விலங்குகளும், செடிகொடிகளும் அடங்கும். ஆனால் மிகச்சிறிய உயிரணு முதல் உயிர்களுள் சிறப்புவாய்ந்த மனிதன் வரை எல்லா உயிருள்ளனவற்றிற்கும் சோதனைப் பொருள்களினின்றும் வேறு பொதுவான ஏதோ ஒரு தன்மையுள்ளது. அதுதான் உயிர்.