பக்கம்:உரிமைப் பெண்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

உரிமைப் பெண்


நிறுத்திக்கொண்டேன். யோசித்துப் பார்க்கிறபோது அதைச் சொல்வது உசிதமில்லை என்று பட்டது. என் நண்பன் 60 ரூபாய் கொடுத்து அதை வாங்கியிருக்கிறான். மலிவாக அவனுக்குக் கிடைத்திருக்கிறது. அந்தச் சந்தோஷமாவது இருக்கட்டுமே. விஷயத்தை நான் சொன்னால் அவன் என்னைக் கடிகாரத்தை எடுத்துக் கொள்ளும்படி வற்புறுத்துவான்; அதற்காக அவன் தந்த ரூபாயைப் பெற்றுக்கொள்ளவும் மறுத்து விடுவான். அந்தச் சங்கடமெல்லாம் வேண்டாமென்று நான் மெளனமாக இருந்து விட்டேன்.

ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் அவனுக்குச் செய்தேன். “பட்டணத்தை விட்டுப் போகும் வரையில் கடிகாரத்தை ஜாக்கிரதையாக வைத்துக்கொள். என்னுடைய மேஜை மேலே போட்டுவிட்டு அங்குமிங்கும் போய் விடாதே” என்றேன்.

“மேஜை மேலே வைத்தால் நீ தூக்கிக் கொள்வாயா? அல்லது உன் மனைவி தூக்கிக் கொள்வாளா? உங்கள் மேல் எனக்கு அப்படி ஒன்றும் சந்தேகம் இல்லையே” என்று கேலியாகப் பேசினான் நண்பன்.

நான் பதில் பேசவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/85&oldid=1138163" இலிருந்து மீள்விக்கப்பட்டது