பக்கம்:உருவும் திருவும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை


மிழ் இலக்கியம் வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் மிக்கது; ஏறத்தாழ இருபது இருபத்தைந்து நூற்றாண்டுகளாக இடையீடின்றித் தொடர்ச்சி யாகச் சிறக்க வளர்ந்து வளம்பெற்று நிற்பது. இவ் வாறு செம்மையும் சிறப்பும் இனிமையும் நீர்மையும் கொண்டிலங்கும் தமிழ் அன்னைக்கு அவ்வப்போது தோன்றிய புலவர் பெருமக்கள் சிறந்த இலக்கியச் செல்வங்களைப் படைத்துப் படையலிட்டு மகிழ்ந் தனர். இத்தகு இலக்கியச் செல்வங்கள் நம் நெஞ்சை அள்ளும் நீர்மையனவாகும். இலக்கியப் பூங்காவில் 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ யாக நின்று யான் பெற்ற இலக்கிய இன்பம் இந் நூலின் பன்னிரு கட்டுரைகளாக இடம் பெற்றுள் ளன. முதற்கண் உள்ள உருவும் திருவும் என்ற கட்டுரையின் பெயரே இந் நூலிற்கும் பெயராய் அமைகின்றது. உரு, திரு. இவற்றின் உயர்வு, தமிழின் தெய்வத்தன்மை, தமிழ் மக்களின் அற வாழ்க்கை, குறள் கூறும் வாழ்வு, கண்ணகி கற்பு, விதியின் பேராற்றல், சேக்கிழார் கம்பர் முதலிய பெரும் புலவர்களின் கவிதைச் சிறப்பு, பெளத்த சமய உண்மைகள், பாரதியின் குழந்தை உள்ளம், பாரதியாரின் வாழ்வு முதலியவற்றினை ஒரளவு அறிந்துகொள்ளுதற்கு இந் நூல் துணைபுரியும் என்பது என் உள்ளக்கிடக்கை. இந்நூலினைத் தமிழ் கூறு நல்லுலகம் இனிது வரவேற்று என் முயற்சிக் குத் தொடர்ந்து ஊக்கம் ஊட்டும் என்று நம்பு கின்றேன்.

சி. பா.