பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

உலகப் பெரியார் காந்தி



கிளர்ச்சி ஏற்பட்டு, நாடு, இலட்சிய பூமியாக இருக்க வேண்டும் என்பதாகும்.

நான் காணவிரும்பும் இந்தியா இவ்விதமானது--என்று உரைத்துவிட்டார். உயிர் துறக்கும் நேரம் வரையிலே அதற்காகவே உழைத்தார் -- அவர் உயிர்பிரியும்போது, அவருடைய மனக்கண்முன், எத்தகைய இந்தியா தெரிந்திருக்கும்? அவர் காணவிரும்பிய காட்சியா! அல்லவே! அவர் காணவிரும்பிய இந்தியாவில் கோட்சே இருக்கமுடியுமா இருக்க இடமுண்டா? அவர் காணவிரும்பிய இந்தியாவில் சேரிகள் உண்டா? அவர் காணவிரும்பிய இந்தியாவில், ஜாதிபேதக் கொடுமை இருக்குமா? அவர் காணவிரும்பிய இந்தியாவில். ஏழையின் வாழ்வு இருண்டுகிடக்குமா? அவர் அவ்விதமான இந்தியாவை அல்ல, ஏழைக்கு வாழ்வுதரும் இந்தியாவை--எல்லோரும் ஓர் குலம் என்ற இலட்சியத்தைக்கொண்ட இந்தியாவைக்--காண விரும்பினார். அந்த இலட்சிய பூமியை உருவாக்குவதையே பணியென்று கொள்வதுதான், அவருடைய காலத்திலே பிறந்தவர்களின் கடமை--அப்போதுதான் எதிர்காலத் தலைமுறைகள், 'உத்தமர் மறைந்தார் -- ஆனால் அவருடைய உள்ளத்திலிருந்த இலட்சியத்தை, அவர் காலத்தவர், உருவாக்கிக் காட்டினர்' என்று பெருமையுடன் பேசுவர். விடுதலைப்போர், அந்நிய ஆட்சியாளரிடமிருந்து நாட்டை மீட்பது என்ற அளவோடு மட்டும் உள்ளது என்ற முறையிலே அவர் கொள்ளவில்லை--அறிவித்தது அதுவல்ல--ஒரு இலட்சிய பூமியைக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். நாட்டை அன்னிய ஆட்சியிலிருந்து விடுவிக்கும் விடுதலைப் போர்க் கட்டம், அன்னியப் படை பலத்துக்கு மட்டுமே நாம் பயப்படக்கூடிய நிலையை உண்டாக்கக் கூடியது. விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும், கடலிலிருந்தும் அன்னியர், எதிர்த்து அடிப்பர், விடுதலைப் போரின் மற்றோர் கட்டத்தின் போது மறைந்தவரின் மனக்கண்முன் தோன்றிய நாடு உருவாவதற்காக நடத்தப்படும் விடுதலைப் போரின்போது, அன்னியரிடமிருந்தல்ல, நம்மவரிடமிருந்தே, விண், மண், கடல் எனும் இடங்களிலிருந்து மட்டுமல்ல, தம் ஒவ்வொருவர் மன-