பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

‘பித்த கான்த்ரோபஸ் ஏரக்டஸ்' என்று அவனுக்குப் பெயர் கொடுத்தார். ‘பித்தகோ' என்றால் கிரீக் மொழியில் குரங்கு என்று பொருள். அந்த்ரோபஸ்' என்றால் மனிதன்.

இவ்வளவில் நின்றார்களா ஆராய்ச்சியாளர்கள்? இல்லை. தொடர்ந்து தேடினார்கள்.

டாக்டர் பிளாக் என்பவர் ஓர் அறிஞர். அவர் என்ன செய்தார்? சீனாவுக்குப் போனார். பீகிங் அருகிலே சில மனித எலும்புகளைக் கண்டுபிடித்தார். 'ஜாவா மனிதனின் சகோதரன் இவன்' என்றார். சீனா மனிதன் அல்லது பீகிங் மனிதன் என்று இவனுக்குப் பெயரிட்டார்.

அடுத்தபடியாக ஆப்பிரிக்காவிலே தேடத் தொடங்கினார்கள். தென் ஆப்பிரிக்காவிலே ஓரிடம்.

குரோம்டராய் என்பது அந்த இடத்தின் பெயர். அங்கே சில மனித எலும்புகளைக் கண்டுபிடித்தார் டாக்டர் புரூம் என்பவர். அதாவது ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து எட்டாம் ஆண்டு. 'மனித குலத்தின் மூதாதை இவனே என்றார்.