பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 ♦ அறிஞர் அண்ணா



பஸ் ஓட்டுபவர் 'லாரி ஓட்டுவதுதான் இலாபகரமானது' என்று நினைக்கக் கூடும்; லாரி ஓட்டுபவர், 'பஸ் ஓட்டுவது பெருமை தரக்கூடியது' என்று கருதுவார்; டாக்சி ஓட்டுபவர்--சொந்தக் கார் ஓட்டுவதை விரும்புவார்; தனிப்பட்டவர்களிடம் கார் ஓட்டுபவர்களுக்கு டாக்சி ஓட்டுவதில் நாட்டம் ஏற்படலாம்!

இப்படி, அவரவர் நினைப்பில் எதுதான் உண்மை?--எல்லாம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப் போலத்தான்!

ஆகவே, ஒரு தொழிலில் இருப்பவர் வேறு தொழிலில் நாட்டம் செலுத்துவது நல்லதல்ல!

'இந்தத் தொழில் நல்லதா-அந்தத் தொழில் நல்லதா என்று நினைக்காமல்-இந்த டாக்சி ஓட்டும் தொழில் வளரக் கூடியது என்பதை நம்பி-இதிலேயே நீங்கள் இருக்க வேண்டும்; இந்தத் தொழில் நியாயமானது-நிம்மதி தரக்கூடியது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்!

அமெரிக்கப் பணக்காரர்கள் வீட்டில் கார் ஓட்டிகளாக வேலை செய்பவர்கள், தாங்களும் சொந்தத்தில் கார் வைத்திருக்கிறார்கள்; தாங்கள் வீட்டிலிருந்து தங்கள் சொந்தக் காரிலேயே வேலைக்குச் செல்கிறார்கள்; தாங்கள் வேலை செய்யும் வீட்டிற்குச் சென்றவுடன்-சொந்தக் காரை அங்கு நிறுத்தி விட்டு, முதலாளியின் காரை ஓட்டுகிறார்கள்; வேலை முடிந்ததும் சொந்தக் காரை எடுத்துக் கொண்டு வீடு திரும்புகிறார்கள்; அதைப் போன்ற வசதி நமது நாட்டில் இல்லை!

செல்வம் கொழிக்கும் அமெரிக்காவில் ஒருவருக்கு மூன்று--நான்கு என்ற விகிதத்தில் கார் இருப்பதாகச் சொல்லப்படுகிறது; பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஏற்பட இந்தத் தொழிலில் நிம்மதி ஏற்படும்!