பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 43



மற்ற ஆலைத் தொழிலுக்குக் கிடைக்கும் வாய்ப்பும்---வசதியும்--விஞ்ஞானக் கருவிகளின் துணையும்--பொறிகளின் உதவியும் கிடைக்காத நிலையிலும், நேர்த்தியாக--நீடித்து உழைக்கக்கூடிய--நல்ல தரமுள்ள--மெச்சத்தக்க--வியக்கத்தக்க வகையில் நமது கைத்தறியாளர்கள் துணிகளைத் தயாரிக்கின்றனர்!

ஆலைகளில் பொறிகளின் துணைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் சரக்கைவிடக் கண்ணைக் கவரத்தக்க வகையில் புதுப்புது ரகங்களை கைத்தறியில் உற்பத்தி செய்கின்றனர்!

ஆலைகளில்தான் இப்படிப்பட்ட துணிகளை உற்பத்தி செய்ய முடியும்' என்ற நம்பிக்கை இருந்து வந்த காலம் ஒன்றிருந்தது; ஆனால், இன்று ஆலைகளையும் மிஞ்சத் தக்க வகையில்--விதவிதமான வேலைப்பாடுகளுடன் வேகமாகவும் தயாரிக்க முடியும் என்பதை, நமது நெசவாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர்!

இருந்தும், அவர்களது வாழ்வில் முன்னேற்றமில்லை; எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படக் கூடியதாக இல்லை! என்றாலும் பல்லாண்டுகளாக இருந்து வரும் கலைத்திறனை--உலக மக்கள் பாராட்டி வரவேற்கும் அளவுக்கு வளர்ந்துள்ள வெளிநாட்டுச் சந்தையிலிருந்து, ஏராளமான, பணத்தை ஈட்டித் தரும் ஒரு நேர்த்தியான கலைத்திறனை--அப்படியே அடியோடு அழிந்து போகும்படி விடுவது விரும்பத் தக்கதன்று!

வெள்ளை வேட்டியாகட்டும் வண்ணச் சேலையாகட்டும்--எதைப்பார்த்தாலும் கண்ணைக் கவரக் கூடியதாக--கருத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்குமே அல்லாது, 'நம்முடைய அனுதாபத்திற்குப் பாத்திரமாக வேண்டும்' என்ற பரிதாபத்திற்குரிய நிலையில் எதுவும் இருக்காது!

எந்தச் சரக்கைப் பார்த்தாலும், 'அதை வாங்கலாமா என்று தோன்றுமே தவிர, அந்தச் சரக்கின் நேர்த்தியைப்