பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 49



நாடுகளைவிட நாம் மிகப் பின்னணியில் இருப்பதால் இங்கு சுவையற்ற, கவைக்குதவாத வாழ்க்கையை நடத்துவதற்கே மிகப் பெரும்பாலான மக்கள் மாடுடன் உழைக்கிறார்கள். மனித உழைப்பு மிக மிக அதிகமான அளவிலேயே செலவிடப்படுகிறது. மனிதன் பிணமாகாதிருக்க, நல்வாழ்வுபெற அல்ல--சாகாமலிருக்க!

விளை நிலத்தைத் தரிசாகப் போட்டால் நிலத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி தந்து அதிக விளைச்சலை உண்டாக்குவோம்.

17. தொழிலாளி–கரை காணாதவன்

காடு நிலமானதும், வனம் தோட்டமானதும், மேடு மாளிகையானதும், கரம்பு ஊற்றானதும், பள்ளம் பாதையானதும், பாட்டாளியின் உழைப்பினால்; ஆனால் அவன்--அந்த உழைப்பிற்குப் பிறகு--அதனாலான உல்லாசங்களை அனுபவிக்கின்றானா என்றால் இல்லை!

தோட்டத் தொழிலாளியின் வியர்வை வாடை அவனது உழைப்பால் மலர்ந்த மலரில் இராது! அவனது வாழ்க்கையோ--கசப்பு! அவன் பயிரிட்டுப் பிறருக்குத் தரும் கனியோ--சுவையுள்ளது!

பூமிக்கு அடியில் இருந்து அவன் செல்வத்தைச் செதுக்கி எடுத்துத் தருகின்றான்; பிறகோ, அதன்மீது பணம் படைத்த பிரதாபன் உலவுவதைக் காண அண்ணாந்து பார்த்துவிட்டு. தனது குடிசையில் கூரையின் ஒழுகலைக்கண்டு மனம் கசிகிறான்!

கடலில் குளித்து, சுறாவும்--பிறவுக்கும், இரையாகாது தப்பி முத்து எடுக்கிறான். பின்னர் அது, யாருடைய கழுத்திலோ மாலையாகிறது--கைவளையாகிறது, காதுகளில் நடனமாடுகிறது! ஆனால் அந்த முத்தை எடுத்த தொழிலாளியோ--வறுமைக் கடலில் நீந்தி நீந்தி கரை