பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 79



களத்திலே பெற்ற வெற்றிகளும்--மன்றங்களிலே அரசியல் நுட்பமறிந்தோர் பெற்ற வெற்றிகளும் சாதிக்க முடியா மாண்பினை, இராபர்ட் ஓவன் தன் தோல்வி மூலமே சாதித்தார்!

வெற்றி பெற்றிருந்தால் உலகமே புத்துருவம் கொண்டிருக்கும்!

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாட்டாளி ஒரு கணம் புன்னகை புரிந்தான்! ஓவன் அளித்த ஒளி, அவன் மனதிலே புதுப்புது எண்ணம் தந்தது! அவனை அனைவரும் அடக்கப் பார்த்தனர்--அறிவுரை கூறினர்-- பொறுமையின் அருமை பற்றிக் கூறினர்; இராபர்ட் ஓவன், அவர்களுக்கு மகிழ்வூட்டினார்--நம்பிக்கை எழச் செய்தார்.

ஒரு மன்னனின் தலையைச் சீவி--வேறோர் மன்னனை நாட்டை விட்டு விரட்டி-இங்கிலாந்து நாடு புயலைக் கிளப்பி--அரசாளும் முறையிலே இருந்து வந்த எதேச்சாதிகாரத்தை ஒழித்துக்கட்ட முனைந்தது; ஓரளவு வெற்றியும் பெற்றது; 'மக்களின் பிரதிநிதிகள் கூடிடும் மாமன்றம் வகுக்கும் முறைப்படி, மன்னன் அரசாளுவது' என்ற நிலை அமைக்கப்பட்டது! நாடு புதியதோர் பொலிவு பெற்றது! வெளிநாடுகளிலே, இங்கிலாந்தின் வணிகர்கள் பொருள் திரட்டினர்! இங்கிலாந்தின் கொடி தாங்கிய கலன்கள், எல்லாக் கடல்களிலும் பெருமிதமாகச் சென்றன!

உலகத்துக்குப் 'புது நாயகர்' என்ற கீர்த்தியைப் பெறுவதற்கான முயற்சியில், நாடு ஈடுபட்டிருந்தது; செல்வம் திரண்டது; பரம்பரைச் சீமான்கள் கிளம்பினர்--வியாபாரக் கோமான்கள் சூதாடியும், சுக போகத்துக்குச் செலவிட்டும் கடனாளியாகி விட்ட பழைய பிரபுக்களின் பண்ணைகளையும், மாளிகைகளையும் விலை கொடுத்து வாங்கிப் புது மெருகு பெற்றனர்! நாட்டின் தொழில் வளமும் பெருகிற்று! பாட்டாளி மட்டும் பழையபடி பெருமூச்செறிந்தபடிதான் இருந்தான்! புது முறை