பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானம்தான் பாடிற்றா?
வான்நிலவு பாடிற்றா?’
- என

வானம்பாடியின் இசைகேட்ட மகிழ்ச்சியில் கிறங்கிப் போய்க் கேட்பார் பாவேந்தர் பாரதிதாசனார்.

அந்த ‘வானம்பாடி’ யாகப் பாவலர் முடியரசனாரைப் பார்த்தவர் அறிஞர் அண்ணா! 'திராவிடர் நாட்டு வானம்பாடி’ என அவர் பாவலரைப் போற்றினார்.

தமிழின மேம்பாட்டிற்குத் தமது எழுத்தாற்றலால் உரம் சேர்த்துப் புகழ் பெற்றவர் முடியரசனார். இலக்கிய வடிவங்கள் எல்லாவற்றிலும் மூழ்கி எழுந்த அவருக்கு, நாடகக் காப்பியம் எழுத வேண்டும் என்ற ஏக்கம் மட்டும் நிறைவேறாமல் இருந்தது. இளம்பெருவழுதி அக்குறையைக் குறைத்தது.

பேராசிரியர் தமிழண்ணல் முயற்சியும் துணைவேந்தர் இராமச்சந்திரனார் உறுதுணையும் அறிஞர் வசுபமாணிக்கனார் வழிகாட்டலும் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலத்தின் வழி பாவலர் முடியரசனார் இந்நாடகக் காப்பியத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்கின. ‘இளம்பெருவழுதி’ 1985-ஆம் ஆண்டிலேயே பிறந்தபோதும், நம் கைகளில் தவழ இருபதாண்டுகளுக்கு மேல் காத்திருக்க நேர்ந்து விட்டது.

‘இளம்பெருவழுதி’ நாடகக் காப்பியம் எழுவதற்கு மூல காரணம், முடியரசனாரே ‘போர்வாள்’ (25.09.1948) இதழில் எழுதிய ‘இளம்பெருவழுதி’ என்னும் சிறுகதைதான்!