பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8


காதல், வீரம், கையாற்றவலம், முப்பெருஞ்சுவைகளும் முகிழ்த்தெழ, காதலும், வீரமும் கரையென நிற்க, வீரப்பேராறு வீறிட்டுப் பாயும் வீரகாவியம்.

பண்டைத் தமிழே, தமிழர்க்கு ஊன்றுகோல் எனப் பண்டிதம் பாடிய பைந்தமிழ்க் காப்பியம்.

'உண்டாலம்ம இவ்வுலகம்’ எனப் பாடிய பழந்தமிழ்ப் பாண்டியன், போர்வாள் எறிந்த இளம்பெருவழுதி கடலுள் மாய்ந்த நாடகக் காப்பியம்.

எப்படி வளரும் தமிழ்? எனச் சிந்திக்க வைக்கும் கட்டுரைகள். மாணாக்கர்களை நல்வழிப்படுத்த அன்புள்ள பாண்டியனுக்கும், இளவரசனுக்கும் எழுதிய கடித இலக்கியங்கள்.

எக்கோவின் காதல் கொண்டு, இச் சீர்த்திருத்தச் செம்மல், பார் திருத்தப் படைத்த சீர்த்திருத்தச் சிறுகதைகள்.

முடியரசன் படைப்புகள், படிப்போர் தம் தசைநார்களைப் புடைக்க வைக்கும் தோள்களை நிமிர வைக்கும்; வீறு கொண்டு எழ வைக்கும்; உள்ளம் உருகி அழ வைக்கும்; பண்பாடு காக்க வைக்கும்; தமிழுணர்ச்சி ஊட்டவைக்கும்; சங்க நூல்களைச் சுவைத்தது போன்று சிந்தை இனிக்கும்.

தாம் எழுதுகின்ற கருத்தை உணர்ச்சியோடு உரைத்துப் பிறர் உள்ளத்திற் குடிகொள்கின்ற பெற்றியாளரே கவிஞர் என்ற இலக்கணத்திற்கேற்ப, முடியரசனார் தம் நெஞ்சிற்பூத்தவையான கவித்துவம் திகழும் செம்மொழிச் செல்வங்களைத் துய்ப்போர் உண்மையில் பெறும்பேறு பெற்றவரே. தமிழ் வெல்லட்டும்! தமிழ் உயரட்டும்! தமிழ்மண் சிறக்கட்டும்!

முடியரசர் கவிபரப்பி முத்தமிழுக்கு முடிசூட்டுவோம்!

- பாரிமுடியரசன்.

முடியரசன் குடில், 569, பூங்கொடி வீதி, சூடாமணி நகர், காரைக்குடி - 630 003.