பக்கம்:எங்கே போகிறோம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மேம்பாட்டில் ஆன்மிகத்தின் பங்கு O 159

வளரும்; வாழும்; வாழ வைக்கும். அதனால்தான் தம்மை உணர்ந்த நிலையிலேயே தலைவனாகிய கடவுளை உணரமுடியும் என்றனர் ஞானிகள்!

ஆன்மிகம் என்பது முற்றாகச் சமயமும் அல்ல; சமயம் சாராததும் அல்ல. ஆனால், ஆயிரத்தில் ஓரிருவர் கடவுள் பக்தியில்லாமலும், அறிவியல் மேதைகளாக, நல்லவர்களாக, சான்றோர்களாக, வையகத்தை வாழ்வித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலோரின் ஆன்ம வளர்ச்சிக்குக் கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் ஒரு சாதனமாகும்.

கடவுள் வழிபாடு, பக்தி உடையவர்களில் பலர் ஆன்ம சக்தியே இல்லாதவர்களாக, கொடியவர்களாகக் கூட இருக்கிறார்கள். இவர்களுக்குக் கடவுள் பக்தி மனிதர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல. மீனுக்குத் தேவைப்படும் தண்ணீரைப் போல, மனிதனுக்குக் கடவுள் பக்தி அமைய வேண்டும்.

ஆன்மாவின் தூய்மையே மனத் தூய்மை. மனத்தால் புலன்களும் அழுக்கற்றதாகும்; புலன்களில் தூய்மை, பொறிகளில் தூய்மை, இதுவே சீரான வளர்ச்சி. பொறிகளின் துய்மையால், ஆன்மா தூய்மையடைதலும் உண்டு. ஆனால் இது கடினம். பல சமயங்களில் வழுக்கல் ஏற்பட்டுத் தோற்றுப் போதலும் உண்டு. ஆன்மிக வாழ்க்கைக்கு இல்லறமா? துறவறமா? என்ற விவாதம். கிடையாது. இரண்டிலும் ஆன்மிக வளர்ச்சி சாத்தியமே. வாழ்பவர்களைப் பொறுத்ததே ஆன்மிக வளர்ச்சி.

ஆன்மிகம் என்பது துறவு நெறியைச் சார்ந்ததென்று பலர் கருதுகின்றனர். இது தவறு. உலகத்தை வெறுப்பது ஆன்மிகம் அல்ல; உலகத்தை அறிந்துகொண்டு, அதற்குள் வாழ்ந்து, தங்களையும், உலகத்தையும்,