பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சு. சமுத்திரம்

ஏங்கி அழுதாள். எல்லா சேமிப்புப்பணமும் தீர்ந்து போய், பழையபடியும் வாழ்க்கையைத் துவக்கி, காசு சேர்ப்பாள். இப்படிச் சேர்ப்பதும், அதுக்காகவே அவன் அவளோடு சேருவதும் வாடிக்கையாக இருந்தது. பின்னாளில் ஒரு பத்திரிக்கை கதை கேட்டபோது, இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. இதையே கதையாக எழுதினேன். குங்குமத்தில் பிரசுரமானதாக ஞாபகம்.

பூவம்மாவின் குழந்தை

இன்னொரு சமாசாரமும் என்னைப் பெரிதும் நெகிழ வைத்தது. நான் இருந்த வீட்டு வளாகத்திற்கு பக்கத்து வளாகத்தில் ஒருத்தன். அவன் பெண்டாட்டி ஒரு லாரி டிரைவரோடு ஓடி விட்டாள். கைக் குழந்தையையும் எடுத்துக் கொண்டு போய்விட்டாள். அந்த டிரைவருக்கும், இவன் பெண்டாட்டிக்கும், இஸ்குதோஸ்கு இருந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த அப்பாவிக்கு தெரியாமல் போய்விட்டது. ஆனால் அவராலோ அந்த ஐந்து அல்லது ஆறு மாதக் குழந்தையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மகாபலிபுரத்திற்கருகே உள்ள ஒரு கிராமத்தில், அவர்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, அவன் போயிருக்கிறான். குழுந்தையைக் கொடு என்று கேட்டிருக்கிறான். அவளோ, அந்த குழந்தை ‘உனக்குப் பிறக்கவில்லை. இவருக்குத்தான் பிறந்தது’ என்று சொல்லியிருக்கிறாள். இவன் குழந்தையை விட்டு விட்டு, புறப்படத் தயாராக இருந்திருக்கிறான். ஆனால், அந்தக் குழந்தையோ, இவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு விம்மி இருக்கிறது. இவன் நெகிழ்ந்து