பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

அந்த உழைப்பில் மிச்சப்படுகின்ற நேரத்திலே குறைந்த உழைப்பில் அனுபவித்த பலனை மற்றவர்களுக்கும் அளிக்கின்ற மனம் வேண்டும். அது தான் வாழ்க்கை!

வாழ்க்கை என்றால் தேவைகள் நிறைவுற்றிருக்க வேண்டும்!

வண்டி இழுக்கிற வரதன் வாடுகிறான், வண்டியிலே இருப்பவன் சுகமாக வாழ்கிறான் என்றால், இதை அடுக்கு மொழி என்று சிலர் கேலி பேசுகிறார்கள். வண்டி இழுக்கிற வரதனைப் பார்த்து 'எப்படி இருக்கிறாய்' என்று கேட்டால் ஏதோ இருக்கிறேன் என்று கூறுவான். இருப்பது வாழ்க்கை அல்ல ! இருக்கிறான் என்றால் மற்றவர்கள் மதிக்கத்தக்க விதத்திலே வாழ வேண்டும்! 'பாவி! இவனும் இருக்கிறானே' என்னும் விதத்திலே வாழக் கூடாது!

தமிழர்கள் நல்ல வாழ்க்கை முறைகளை கையாண்டார்கள். துயர் இல்லாது இருந்தார்கள். நிறைவுற்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதனால் தான் அக்காலத்திலே உள்ள புலவர் ஒருவர் “யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று பாடினார். தம்மைப் போலவே எல்லா நாட்டினரும் இருப்பார்கள் என்று எண்ணியதால் தான் எங்களுக்கு, எல்லா ஊரும் எங்கள் ஊர் தான் என்று அவ்வாறு சொன்னார்.

ஆனால் பிற்காலத்தில் வந்த உறவினர்கள், இருப்பதைக் கெடுக்க வந்தார்களே தவிர, கொடுக்க வரவில்லை. நள்ளிரவு கள்ளர்களுக்கும் இவர்களுக்கும் பெயரில் தான் மாற்றம், செய்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்றே நான் கருதுகிறேன். பிற்காலத்திலே வந்தவர்கள் புதுவழி என்று சொல்லிக் கொண்டு தவறான வழியிலே சென்றனர்.

பழந்தமிழர்கள் கடவுள் பக்தியில் குறைந்வர்களாக இருந்தனர் என்று சிலர் கூறுகிறார்கள். பழந்தமிழர்கள் கடவுள் பக்தியிலே அழுத்தமான நம்பிக்கை வைத்துக்