பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129


எனக்கு மட்டும் தனியாகச் சைவ உணவு தயாரிப்பது சிரமமல்லவா? ஆலயத்தில் அர்ச்சகராக இருந்து வந்த ஒருபெரியவரின் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. கம்பெனியில் புலால் போடும் நாட்களில் ஆலயக் குருக்கள் வீட்டில் எனக்குச் சாப்பாடு. பகல் வேளைகளில் குருக்களின் பிள்ளைகளோடு சேர்ந்து நாங்கள் கோலி விளையாடுவது வழக்கம். இதில் தேவன் என்ற ஒரு சிறுவன் என் கூட்டாளி. சின்னஞ் சிறு பருவத்தில் ஏற்பட்ட நட்பல்லவா? எப்படி மறக்க முடியும்? இந்த நட்பு விடுபடாதிருக்க இடையிடையே அச் சிறுவனைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்கேற்பட்டது. அச் சிறுவன் தான் இன்று சென்னை இராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயில் அர்ச்சகராக இருக்கும் தேவ சேனதிபதி குருக்கள்.

மேக்களுர் முடிந்து மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து நாடகங்கள் நடித்தோம். பட்டாபிஷேக நாடகத்தன்று நான் மறக்க முடியாத ஒரு விசேஷம் நடந்தது.

பரிசு கொடுப்பதில் போட்டி

சத்தியவான் சாவித்திரிக்கு நல்ல வரவேற்பு என்று முன்பே குறிப்பிட்டேனல்லவா? அதையே பட்டாபிஷேக நாடகமாகவும் வைத்திருந்தார்கள். நாடக முடிவில் வழக்கம்போல் அப்போது சட்டாம் பிள்ளையாக இருந்த திரு கல்யாண வீரபத்திரன் மேடைக்கு வந்து, “நடிகர்களுக்குப் பரிசு கொடுப்பவர்கள் கொடுக்கலாம்” என்று அறிவித்தார். சபையிலிருந்த சிலர், ‘பபூன் வேடதாரிடம் பரிசுகளைக்கொடுக்க, அவர் பரிசு கொடுத்த ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி, நடிகர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

சத்தியவானாக நடித்த ஏ. கே. சுப்பிரமணியனுக்கும், சாவித்திரியாக நடித்த சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கும் ஊரில் நல்லபெயர். “சத்தியவான்தான் உயர்ந்த நடிகர்” என்றார்கள் சில ரசிகர்கள். “இல்லை; சாவித்திரிதான் உயர்ந்த நடிகர” என்றார்கள் வேறு சிலர். இவ்வாறு ஊரிலுள்ள நாடக ரசிகர்கள் இரு நடிகர்களிடத்திலும் ஆதரவு காட்டி வந்ததால், “ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்னும்