பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297


ஆண்களே பெண் வேடம்

ஏழாம் தேதி எல்லோருக்கும் பாடம் கொடுக்கப்பட்டது. மேனகா, நூர்ஜஹானைத் தவிர மற்றும் சில பெண் பாத்திரங்கள் இருந்தார்கள். தாசி கமலம், கோமளம், கனகம்மா ஆகிய வேடங்களைப் போடுவதற்கு உடன் பிறந்த சகோதரியர் மூன்று பேர் வந்திருந்தார்கள். பிராமண விதவையாகிய பெருந்தேவி மேனகாவில் ஒரு முக்கியமான பாத்திரம். அந்த, வேடத்தை நாடகத்தில் சின்னண்ணா டி. கே. முத்துசாமி போடுவது வழக்கம். தலையை மொட்டையடித்துக் கொண்ட பிராமணப் பெண்கள் யாரும் அந்த நாளில் சினிமாத் துறைக்கு வரச் சம்மதிக்கவில்லை. கடைசியில் சினிமாவிலும் சின்னண்ணாவே பெருந்தேவி வேடத்தைப் போட நேர்ந்தது. வேலையாள் ரங்கராஜூவின் மனைவியும் மகளும், எங்கள் குழுவில் அப்போது பிரதான நடிகர்களாக இருந்த டி.என்.சுப்பையாவும், பி.எஸ். திவாகரனும் போடுவதாக முடிவு செய்யப்பட்டது. மேனகா படம் வெளிவந்தபோது, அதற்கு ஆனந்தவிகடனில் விமர்சனம் எழுதிய கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சின்னண்ணாவின் பெண் வேட நடிப்பைப் பிரமாதமாகப் புகழ்ந்து எழுதி இருந்ததோடு, “பெருந்தேவியாக நடிப்பவர் ஒரு ஆண் மகன் என்பதையே என்னால் நம்ப முடியவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார். பெரியண்ணா டிப்டி கலைக்டராக நடித்தார். நடிகமணி எஸ். வி. சகஸ்ரநாமம் தாசில்தார் தாந்தோனிராயராகவும், பிரண்டு ராமசாமி, நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி, நகைச்சுவைச் செல்வன் டி. என். சிவதாணு முதலியோர் பைத்தியக்காரர்களாகவும் நடித்தார்கள். மேனகா பட ஒப்பந்தம் முடிந்த அன்றே சாமா ஐயராக நடிப்பதற்கு என். எஸ். கிருஷ்ணனையே அழைத்து வர வேண்டுமென்று பெரி யண்ணா கூறினார். அதன்படி என்.எஸ். கிருஷ்ணனும் எங்களோடு வந்திருந்தார். அவரே ஐயராகநடித்தார். மற்றும் எங்கள் குழுவி அலுள்ள பெரியவர்கள் பல சில்லரை வேடங்களில் நடித்தார்கள்.

பாட்டுத் தகராறு

மேனகா நாங்கள் நடித்த முதல் திரைப்படமாதலால் அந்தச் செய்திகள் மிகச் சுவையாக இருக்கும். அதனால்தான் சுருக்கமாகச் சொல்லாமல் சற்று விரிவாகவே எழுதுகிறேன்.