பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

299


சாமிநாதன் துரதிர்ஷ்டம்

ஒத்திகை ஆரம்பமாயிற்று. முதல் நாள் எம்.ஆர்.சாமிநாதன் நடிக்க வேண்டிய காட்சிகள். நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜா விஷயங்களைத் தெளிவாக விளக்கிப் பச்சைக் குழந்தைகளுக்குச் சொல்லுவது போலப் பன்முறை சொன்னார். சாமிநாதன் நல்ல கற்பனா சக்தியுள்ள மிகச்சிறந்த நடிகர்தாம். என்றாலும் ஒத்திகையில் பூரணமாக நடிப்பதில்லை. எனவே ராஜா அவரை நடிக்கத் தெரியாதவர் என்று முடிவு கட்டி விட்டார். சாமிநாதனின் துரதிர்ஷ்டத்தை எண்ணி நாங்கள் வருத்தப்பட்டோம். பிறகு ராஜாவுக்கு ஏற்பட்ட அந்த எண்ணத்தை மாற்ற எவ்வளவோ முயன்றோம். கதையில் வரும் ரங்கராஜு பாத்திரத்தை ராஜா பிரமாதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தார். சாமிநாதன் ஒத்திகையில் நடித்ததைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் கவலையாகப் போய் விட்டது, “இந்தப் பாத்திரத்தைப் போட வேறு யாரும் இல்லையா?” என்று வெளிப் படையாகக் கேட்டது எங்களைத் துன்புறுத்தியது. நான் சாமி நாதனுக்குச் சமாதானம் கூறி, நடிக்கச் செய்தேன். ஒத்திகையில் சாமிநாதனுக்கு ஏற்பட்ட இந்த விபத்தைப் பார்த்ததும் நான் கொஞ்சம் விழித்துக் கொண்டேன். ஒத்திகையிலேயே முழுத்திறமையையும் காட்டி, ‘சபாஷ்’ பெற வேண்டுமென்று முடிவு கட்டி வைத்திருந்தேன். மறுநாளே என் ஒத்திகை.

காதல் சிரிப்பு

நைனா முகம்மது நூர்ஜஹான் காதல் காட்சி. நான் கே.டி. ருக்மணியோடு நடிக்க வேண்டிய சுவையான கட்டம், பெண் வேடத்தில் நிற்கும் ஆண்களோடுதான் நான் நடித்திருக்கிறேன். பருவப் பெண்களோடு காதல் காட்சியில் நடிப்பதென்பது அன்று தான் எனக்கு முதல் அனுபவம். வந்தது முதல் நான் மாடிக்குப் போகவும் இல்லை, பெண்கள் எவருடனும் பேசவும் இல்லை. இந்த நிலையிலே ஒத்திகை தொடங்கியது.

நூர்ஜஹான் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். நைனா முகம்மது விரைந்து வந்து, அவள் முகவாய்க்கட்டையைப் பிடித்துத் தன்பக்கம் திருப்பிப் பேச வேண்டும்.