பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334


வித்யாசாகரர்

திருப்பூரில் மற்றொரு புதிய நாடகம் தயாராயிற்று. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் வித்யாசாகரர் என்னும் நாவலை ஒரு சிறந்த நகைச்சுவை நாடகமாக எழுதினார் சின்னண்ணா. இக் நாடகம் 23. 6. 38இல் அரங்கேறியது. வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் ஒரு சிறந்த நாடகம் வித்யாசாகரர். இதில் நான் வித்யாசாகரராக நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்தேன். ஏற்கனவே நடைபெற்று வந்த சமுதாய நாடகங்களில் குறைந்தது முப்பது பாடல்களாவது இருக்கும். ஆனால் புதிதாக தயாரித்த குமாஸ்தாவின் பெண் வித்தியாசாகரர் நாடகங்களில் பாடல்களே வெகுவாகக் குறைத் தோம். அதை ஒரு குறையாக கூடப் பொதுமக்கள் அந்நாளில் குறிப்பிட்டார்கள். வித்தியாசாகரர் நாடகத்திற்கு மொத்தம் பத்தே பாடல்கள்தாம் பாடப்பெற்றன. ஏற்கனவே நடைபெற்று வந்த நாடகங்களிலும் பல பாடல்கள் குறைக்கப்பட்டன. இதன் காரணமாக, எல்லோரும் பாடத் தெரிந்திருக்க வேண்டு மென்ற கம்பெனியின் நீண்டநாள் கட்டுப்பாடு சிறிது தளர்ந்தது. சுமாராகப் பாடிக்கொண்டிருந்த நடிகர்கள் சிலரும் பாடுவதையே மறந்துவிட்டார்கள். ஒரு சிலர் பாடுவதற்கே வெட்கப்பட்டார்கள். நாடக மேடையில் பாடலுக்கு இருந்து வந்த ஆதிக்கம் ஆட்டம் கொடுக்கத் தொடங்கியது.

அறிவுச்சுடரும் அறிவு அபிவிருத்திச் சங்கமும்

நாடக மேடையையும், வேடிக்கை விளையாட்டையும் தவிர வேறு எதையும் அறியாதிருந்த நடிகர்களிடையே பொது அறிவு மலருவதற்காகச் சங்கம் ஒன்று தோற்றுவித்தேன். அறிவு அபி விருத்திச் சங்கம் என்பது அதன் பெயர். பல்வேறு நூல்களையும் பத்திரிகைகளையும் சங்கத்தில் வாங்கிப் போட்டேன். நடிகர்கள் உற்சாகத்தோடு படிக்கத் தொடங்கினார்கள். நான் எண்ணியபடி நடிகர்களின் பொது அறிவு மலர்ந்தது. நாட்டிலுள்ள தேசிய இயக்கங்களைப் பற்றியும் உலக நிகழ்ச்சிகளைப் பற்றியும் சொற் போர் நிகழ்த்தும் அளவுக்கு நடிகர்கள் பயிற்சி பெற்றார்கள்.