பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

519


அறிந்த போது மிகவும் பெருமிதமுற்றேன். நாடகத்தைப் பேராசிரியர் வ. ரா. வும் நானும் ஒன்றாக இருந்து பார்த்து ரசித் தோம். அருமையான நாடகம்; உணர்ச்சி மிக்க உரையாடல்கள்; எஸ். வி. எஸ். ஸின் நடிப்பு பிரமாதமாக இருந்தது.

என். எஸ் கே. சந்திப்பு

12ஆம் தேதி மகாஜன சபையில் எழுத்தாளர் கூட்டம் நடை பெற்றது. நண்பர்கள் பலரைச் சந்தித்தேன். திரு நாரண துரைக்கண்ணன் அவர்களைக் கண்டேன். உயிரோவியத்தை நாடகமாக்குவதுபற்றி விவாதித்தோம். 13ஆம் தேதி திருநாரண துரைக்கண்ணன் இல்லத்தில் பகல் உணவருந்தினேன். அன்று மாலை நானும் ஜூபிடர் சோமுவும் சிறையில் கலைவாணர் என். எஸ். கே.யைச் சந்தித்தோம். அன்றிரவு ஸ்ரீராம பாலகான சபையின் குடும்ப வாழ்க்கை நாடகம் பார்த்தேன். கதை யமைப்பு எனக்கு நிறைவளிக்கவில்லை. 14 ஆம் தேதி சோமுவும் நானும் காஞ்சீபுரம் சென்றோம். அண்ணா அவர்கள் ஊரில் இல்லாததால் திரும்பினோம். அன்று மாலையே நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரைச்சந்தித்து மனோஹரா திரைப்பட உரிமையைக் கேட்டார் சோமு. “ஷண்முகம் மனோகரனாக நடிப்பதாக இருந்தால் தருகிறேன். வேறு எண்ணமிருந்தால் சொல்லுங்கள்” என்றார் பேராசிரியர்; உடனே, “இப்போதைய நிலையில் என்னைத்தான் நடிக்கச் சொல்கிறார். பின்னால் இருக்கும் நிலைமைகளை அனுசரித்து மாறவும் கூடும். எனவே நிபந்தனை எதுவும் போடாமல் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். சோமு அவர்கள், “இல்லை; இல்லை, ஷண்முகந்தான் மனோகரனாக நடிக்க போகிறார். தேவையானால் அந்த நிபந்தனையைத் தாங்கள் போட்டுக் கொள்ளலாம்” என்றார். நான் தான் வற்புறுத்தி, நிபந்தனை எதுவும் போடாமல் மனோகராவின் உரிமையை வாங்கிக் கொடுத்தேன்.

15ஆம்தேதி ஓர் இரவு நாடகம் பார்க்கத்தஞ்சை வந்தேன், பெருத்த மழையினால் அன்று நாடகம் நிறுத்தப்பட்டு விட்டது. 16ஆம் தேதி பில்ஹணனுக்குப் பாடல்கள் எழுத மதுர பாஸ்கரதாஸ் வருவதாக அறிவித்திருந்ததால் மறுநாள் தங்கி நாடகம் பார்க்கும் வாய்ப்பின்றி 16ஆம் தேதி கோவை வந்து சேர்ந்தேன்.